இரட்டை தலையுடன்பெண் பிறந்த கன்றுக்குட்டி
புதுச்சேரி அருகே, இரட்டைத் தலையுடன் கூடிய கன்றுக் குட்டியை கலப்பினப் பசு ஈன்றுள்ளது.அரியூர் அடுத்த கீழூர் காமராஜர் நகரில் வசிப்பவர் கமல், விவசாயியான இவர், தனது வீட்டில் வளர்த்து வரும் கலப்பின பசுவை, சினை ஊசி மூலம் நான்காவது முறையாக கருத்தரிக்கச் செய்தார்.
இப்பசுவிற்கு நேற்று கன்று ஈனும் @நரம் வந்தது. சிவராந்தகம் கால்நடை மருத்துவமனையில், பசுவை பரிசோதித்த கால்நடை மருத்துவர், கன்று ஈனுவதில் சிக்கல் உள்ளது. அறுவை சிகிச்சை மூலம் கன்றை வெளியே எடுக்க வேண்டும் எனக் கூறி, மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தார்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி பயிற்சி கால்நடை மருத்துவ வளாகத்தின் ஈனியல் துறைக்கு அழைத்து வந்தனர். அங்கு, பசுவைப் பரிசோதித்ததில், இரட்டைத் தலையுடன் கன்றுக்குட்டி இருப்பது தெரிய வந்தது. பசுவுக்கு மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை இல்லாமலே, இரட்டைத் தலையுடன் பெண் கன்றுக் குட்டியை வெளியே எடுத்தனர்.உரிய வளர்ச்சியுடன், வளமாக இருந்த கன்றுக் குட்டியின் இரு தலைகளிலும் தலைக்கு இரண்டு கண்கள் வீதம் நான்கு கண்கள் இருந்தன. எனினும், இடது பக்கத் தலை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.
கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், "மரபணு கோளாறு காரணமாக, இரட்டைத் தலையுடன் கூடிய கன்று பிறந்துள்ளது. மிக அரிதாக, லட்சத்தில் ஒரு பசுவுக்கு இது போல நேரலாம். இரட்டைத் தலை கன்று, முழு வளர்ச்சி பெறுவதும் நீண்ட நாள் உயிர் வாழ்வது கடினம் தான்' என்றனர்.