அட்டாக் பாண்டி மீது மிரட்டல் புகார்
மதுரை தெற்குவெளி வீதியைச் சேர்ந்தவர் பிருத்விராஜ்; எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி. கடந்த 2006ல், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள இவரது வீட்டில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம், 4,500 ரூபாய் வாடகைக்கு, "அட்டாக்' பாண்டி குடியேறினார்.
அடுத்த ஓராண்டாக வாடகை செலுத்தாததால், அட்வான்ஸ் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து வாடகை கழிக்கப்பட்டது.
இதன் பிறகும் வீட்டை காலி செய்யவில்லை. பின், கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு, வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி பிருத்விராஜை பாண்டி மிரட்டியதாக, கடந்தாண்டு ஜூலை 17ல், அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். வீடு பிரச்னை தொடர்பாக, பாண்டி தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வீட்டை அவர் காலி செய்யவில்லை.
இந்நிலையில், வீட்டை ஆக்கிரமிக்க திட்டமிட்டு, தன்னை கொல்ல முயற்சித்ததாக, மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் பிருத்விராஜ் புகார் செய்தார். பாண்டி உட்பட ஏழு பேர் மீது மோசடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உட்பட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மனைவி தயாளுவிடம் மே 13ல் விசாரணை நடந்தது.
வீட்டை காலி செய்வதாக, சமரசம் ஆனதை தொடர்ந்து, தயாளு விடுவிக்கப்பட்டார்.
சில பொருட்களை மட்டும் எடுக்காமல் வீட்டை தயாளு காலி செய்தார். இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த 85 சவரன் நகை, 18 ஆயிரம் ரூபாய் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருட்களை எடுத்துக் கொண்ட பிருத்விராஜ், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவனியாபுரம் போலீசில் தயாளு புகார் செய்தார்.
பிருத்விராஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது."கோர்ட்டில் வழக்கு நடப்பதால், வீட்டை காலி செய்ய முடியாது' என பாண்டி தன்னை மிரட்டியதாக, பிருத்விராஜ் தன் பங்குக்கு புகார் செய்தார். பாண்டி, மனைவி தயாளு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.