செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவன் பார்வை பறிபோனது
மகாராஷ்டிரா மாநிலம் யவட்மால் மாவட்டம் சியோனி கிராமத்தை சேர்ந்தவன் மயூர் (12). கடந்த வாரம் தனது தந்தையின் செல்போனில் சார்ஜ் செய்தபடி கேம் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென செல்போன் பேட்டரி வெடித்து சிதறியது. இதில் சிறுவனின் வலது கண் பாதிக்கப்பட்டது. பேட்டரியில் இருந்த கெமிக்கல்கள் கண்ணில்பட்டு பயங்கர வலியை ஏற்படுத்தின. உடனடியாக சிறுவனை அவனது தந்தை சுபாஷ் ராவுத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேல் சிசிச்சைக்காக நாக்பூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு உடனடியாக கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கண்ணில் ஏற்பட்ட நோய் தொற்று மூளைக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. ஆனால் இந்த விபத்தில் சிறுவனின் விழித்திரை முழுமையாக சேதமடைந்து விட்டது. இதனால் வலது கண் பார்வை முற்றிலுமாக பறிபோனது. சிறுவனுக்கு வலது கண்ணில் மீண்டும் பார்வை கிடைப்பது சந்தேகம் என நாக்பூர் அரசு மருத்துவமனை கண் டாக்டர் திலிப் கும்ரே தெரிவித்துள்ளார். சிறுவன் விளையாடியது சீனா தயாரிப்பு செல்போன்.