4 படம் வெற்றி பெற்றால் உடனே முதலமைச்சர் கனவா?
ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து, கார்த்தி நடித்த `சகுனி' படம் தமிழ்நாடு முழுவதும் 1,154 தியேட்டர்களில் திரையிடப்பட்டு, 3 நாட்களில் `சிறுத்தை' பட வசூலை முறியடித்து இருக்கிறது. இதையொட்டி அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, நாசர், மனோபாலா, நடிகை பிரணிதா, டைரக்டர் சங்கர் தயாள், பட அதிபர் எஸ்.ஆர்.பிரபு, வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் `கலைப்புலி' ஜி.சேகரன், வேந்தர் மூவீஸ் மதன், கமலா தியேட்டர் வள்ளியப்பன், ஆல்பர்ட் தியேட்டர் மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
ஆல்பர்ட் தியேட்டர் மாரியப்பன் பேசும்போது, ``ஒரு படம் திங்கட்கிழமை அன்று `ஹவுஸ்புல்' ஆனால், அந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும். இது, சினிமா கணக்கு. `சகுனி' திங்கட்கிழமை `ஹவுஸ்புல்' ஆனது'' என்றார்.
கமலா தியேட்டர் வள்ளியப்பன் பேசும்போது, ``சகுனி அரசியல் படம். அரசியல் மீது ஆர்வம் இருப்பதால்தான் கார்த்தி அரசியல் படத்தில் நடித்து இருக்கிறார்'' என்று குறிப்பிட்டார்.
உடனே கார்த்தி குறுக்கிட்டு, ``ஏங்க...நல்லாத்தானே போயிட்டிருக்கு. ஏன் இப்படி?'' என்றார்.
`கலைப்புலி' ஜி.சேகரன் பேசும்போது, ``சில நடிகர்கள் முதல்-அமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால் சூர்யாவும், கார்த்தியும் அப்படி ஆசைப்படுவதில்லை. நடிக்கிற வேலையை மட்டும் பார்க்கிறார்கள். அந்த அடக்கம்தான் அவர்களின் வெற்றி'' என்றார்.
நடிகர் நாசர் பேசும்போது, ``சில நடிகர்களுக்கு தொடர்ந்து நான்கு படங்கள் வெற்றி பெற்றால், உடனே முதல்-அமைச்சர் கனவு வந்து விடுகிறது. கார்த்தி அப்படிப்பட்டவர் அல்ல. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று தூபம் போடாதீர்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.
நடிகர் மனோபாலா பேசும்போது, ``சிவகுமார் ஒரு மகனை நாட்டுக்கும், இன்னொரு மகனை வீட்டுக்கும் கொடுத்து இருக்கிறார்'' என்றார்.