பிரணாப்பை ஒருமனதாக ஆதரிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை! பாஜக நிராகரிப்பு!
குடியரசுத் தலைவர் தேரதலில் பிரணாப் முகர்ஜியை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை பாரதிய ஜனதா கட்சி நிராகரித்துள்ளது. தங்களது வேட்பாளர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிட பேசிய ரவிசங்கர் பிரசாத், குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியினத்தவரான பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதே சிறந்த முடிவு. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த இவர் மக்களவை தலைவராகவும் இருந்துள்ளார். பழங்குடியினத்தைச் சேர்ந்த சங்மா நாட்டு மக்களிடையே பிரபலமானவர். மக்கள் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவருக்காக பாஜக தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் என்றார்.
முன்னதாக வெளிநாட்டுப் பயணம் முடிந்து விமானத்தில் நாடு திரும்பும்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் அறிவிக்கப்பட்டவுடன் அத்வானி, சுஷ்மா, அருண் ஜேட்லியுடன் பேசினேன். பிரணாப்பை போட்டியின் தேர்வு செய்ய உதவிடுமாறு கோரினேன். திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்தான் நீடிக்கிறது. காங்கிரஸ் கட்சியால் அறிவிக்கப்பட்ட பிரணாப்பை ஆதரிக்கும என்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை என்றார்.