அரசியலுக்குள் செல்ல வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அறிவுரை!
வழக்கறிஞர்கள் அரசியல் பற்று, ஆர்வத்தை ஓட்டளிப்பதில் மட்டுமே காட்ட வேண்டும்'' என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி லட்சுமணன் பேசினார்.
விருத்தாசலம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க சிறப்புக் கூட்டம் நடந்தது. கூடுதல் சார்பு நீதிபதி செம்மல், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சையத் பர்கத்துல்லா, குற்றவியல் நீதித்துறை நீதிபதி முகமது ரிஸ்வானுல்லா ஷெரீப், குற்றவியல் நீதித்துறை நீதிபதி பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி லட்சுமணன் பேசியதாவது:
சென்னை, கேரளா, டில்லி, ராஜஸ்தான் என ஐந்து மாநிலங்களில் நீதிபதியாக பணியாற்றினேன். பெரிய பிரச்னையாக கருதப்படும் முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக் குழுவில் பங்கேற்க வேண்டுமென அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதால் சம்மதித்தேன்.
இரண்டு முறை அணையை நேரில் ஆய்வு செய்து 11 விசாரணை அறிக்கைகளை முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்திடம் வழங்கினேன்.ஏப்ரல் மாதத்தில் தமிழக குழு வழங்கிய அறிக்கையில், முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது. இடிக்க வேண்டியதில்லை. அணை மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம். மாற்று அணை தேவையில்லை என தெரிவித்தோம். எனது அறிக்கையால் ஏழு மாநிலங்களில் உள்ள தமிழர்கள், 80 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
எப்போதும் சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. 25 ஆண்டுகால நீதிபதி பதவியில் வழக்குகளில் எந்த மாறுபட்ட கருத்தும் ஏற்பட்டதில்லை. வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடக் கூடாது.
மூன்று லட்சம் அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது தொடர்பான எதிர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது. இவ்வழக்கில், அரசே செயல்படாத நிலை ஏற்படும். அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என தீர்ப்பளித்தோம். வழக்கறிஞர்களுக்கு அரசியலில் பற்று, ஆர்வம் இருந்தாலும் அதை ஓட்டளிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு பேசினார்.