தேசியவாத காங்கிரசில் இருந்து பி.ஏ.சங்மா விலகல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா அறிவித்து இருந்தார். அவருக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா, ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் அறிவித்தனர்.
பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிட வேண்டாம் என்று சங்மாவை அவர் சார்ந்த தேசியவாத காங்கிரஸ் கேட்டுக்கொண்டது. போட்டியில் இருந்து விலகாவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பி.ஏ.சங்மா விலகினார். அக்கட்சி தலைவர் சரத்பவாருக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார். தேசியவாத காங்கிரசை தொடங்கிய தலைவர்களில் சங்மாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது விலகல் குறித்து சங்மா கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் என்னை வேட்பாளராக இந்திய பழங்குடியினர் கூட்டமைப்பு நிறுத்தியது. பழங்குடியின மக்களுக்கு ஜனாதிபதி மாளிகை என்பது தொலைதூர கனவாக இருக்கக்கூடாது என்ற பழங்குடியினரின் உணர்வுகளை நான் புறக்கணிக்க முடியாது. ஆனால், என்னை ஆதரிக்க தேசியவாத காங்கிரசுக்கு விருப்பம் இல்லை. இது, பழங்குடியினரின் விருப்பங்களை மறுப்பதற்கு சமம் ஆகும்.
தேசியவாத காங்கிரசின் அடித்தளத்தை பல மாநிலங்களிலும் வலுப்படுத்த கடுமையாக பாடுபட்டவர்களில் நானும் ஒருவன். பழங்குடியினரின் ஆதரவு காரணமாகவே, தேசியவாத காங்கிரசுக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்தது.
இந்த நிலையில், கட்சிக்கும், கட்சி தலைமைக்கும் தர்மசங்கடம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, வேறு வழியின்றி, நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுகிறேன்.
நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி. ஜெயலலிதா, நவீன் பட்நாயக் ஆகியோர் வெளிப்படையாக எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் அல்லாத கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் என்னை ஆதரிப்பதாக உறுதி அளித்துள்ளன. இவ்வாறு சங்மா கூறினார்.
பி.ஏ.சங்மாவின் விலகலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஏற்றுக்கொண்டுள்ளார். பி.ஏ.சங்மா, மேகாலயா மாநிலத்தில் எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவரது ராஜினாமா குறித்து மேகாலயா சபாநாயகரிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று சரத்பவார் கூறினார்.
சங்மாவின் மகள் அகதா சங்மா, தேசியவாத காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரியாக இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றிய கேள்விக்கு சரத்பவார் பதில் அளிக்கவில்லை.