லட்சக்கணக்கான மக்களின் தேர்வு அப்துல் கலாம்தான்: பேஸ்புக்கில் மம்தா பானர்ஜி கருத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். இந்தநிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிமுணால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அப்துல் கலாம் தான் வேட்பாளர் என திட்டவட்டமாக கூறினார்.
தற்போது மம்தா தனது பேஸ் புக்கில் அப்துல் கலாமை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் எழுதி இருப்பதாவது: ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாமை நான் செய்த தேர்வு, லட்சக்கணக்கான இந்திய மக்களின் தேர்வாகும். லட்சக்கணக்கான இந்தியர்கள் அப்துல் கலாமை ஜனாதிபதி பதவியில் பார்க்க விரும்பினார்கள். அவர்களது மன உணர்வையே நான் பிரதிபலித்தேன். எனது கட்சி மிகவும் சிறிய கட்சி. மற்ற கட்சிகள் வைத்திருப்பது போன்று பெரிய அளவில் செல்வங்களுடன் இருக்கும் கட்சிபோல நாங்கள் பெரிய கட்சி அல்ல. வாய்மையின் அடிப்படையில் நாங்கள் கட்சி நடத்துகிறோம். இதுவரை வாழ் நாள் முழுக்க நான் என் கொள்கையில் உறுதியாக இருந்துள்ளேன். நான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பேன். ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமே உச்சமானது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் தொகுதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் அப்துல்கலாமை ஆதரிக்கும்படி மனு கொடுக்க வேண்டும். உங்கள் குரலை ஓங்கி எழுப்புங்கள். மக்கள் விருப்பத்துக்கு நான் தலை வணங்குவேன். இந்திய ஏவுகணை உலகின் தந்தையான அப்துல்கலாம் இந்தியர்கள் அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறார். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் உண்மையை எதிர் நோக்குபவர். நிரம்ப அறிவு உடையவர். இத்தகைய குண நலம் கொண்ட ஒருவரையே ஜனாதிபதி பதவியில் அமர்த்த இந்தியர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். இவ்வாறு பேஸ்புக் இணையத்தளத்தில் மம்தா பானர்ஜி எழுதியுள்ளார்.