காங்கிரசுக்கு ஆந்திர மக்கள் பாடம் புகட்டி விட்டார்கள்: ஜெகன்மோகன் தாயார்
ஆந்திராவில் நடந்த இடைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 15 சட்டசபை தொகுதிகளையும் நெல்லூர் பாராளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது.
இடைத் தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி,
இடைத்தேர்தலில் எங்களது கட்சி வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உத்தரவின்படி சி.பி.ஐ. எனது மகன் ஜெகன்மோகனை கைது செய்து சிறையில் அடைத்து. இதனால் நான் ஜெகனுக்கு பதிலாக பிரசாரத்தில் ஈடுபட்டேன். நான் பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் என் மகனை சிறையில் அடைத்த காங்கிரசுக்கு ஆந்திர மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினேன்.
நான் கேட்டுக் கொண்டது போலவே ஜெகனை சிறையில் அடைத்த காங்கிரசுக்கு இடைத்தேர்தலில் ஆந்திர மக்கள் பாடம் புகட்டி விட்டனர். எங்கள் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி பல நூறு கோடி ரூபாயை களம் இறக்கியது. ஒரு ஒட்டுக்கு ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டது. இதையும் மீறி ஆந்திர மக்கள் காங்கிரசை தோற்கடித்து விட்டனர்.
அக்கட்சி வெற்றி பெற்ற ராமச்சந்திராபுரம், நரசாபுரம் ஆகிய தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி ஓட்டுக்கள் அனைத்தும் காங்கிரசுக்கு விழுந்தன. இதனால்தான் அந்த தொகுதியில் காங்கிரஸ் வென்றது. இவ்வாறு அவர் கூறினார்.