தமிழ்நாடு, ஆந்திராவுக்கு நித்தியானந்தாவை கைது செய்ய தனிப்படைகள்!

நித்தியானந்தாவை கைது செய்ய தமிழ்நாடு மற்றும் ஆந்திராவுக்கு 4 தனிப்படைகள் கொண்ட போலீசார் விரைந்துள்ளனர்.
நித்தியானந்தா ஆசிரமத்தில் கடந்த 7ந் தேதி நடந்த நிருபர்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட கைகலப்பு ரகளை தொடர்பாக, நித்தியானந்தா மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் ராமநகர் கூடுதல் சிவில் மற்றும் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இதில் நித்தியானந்தாவை கைது செய்ய போலீசார் வாரண்டு' பிறப்பித்தனர். அவர் தலைமறைவாகி விட்டார். எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆகவே, அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து உள்ளனர்.
இதற்கிடையே நித்தியானந்தா ஆசிரமத்துக்கு எதிராக கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடந்ததால், முதல் மந்திரி சதானந்த கவுடா, நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு சீல்' வைக்க உத்தரவிட்டார். ஆசிரமத்தில் நடந்த சட்டவிரோத சம்பவங்கள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்புதயாள் மீனாவுக்கு உத்தரவிட்டார்.
2 நாட்களில் நித்தியானந்தா கைது செய்யப்படுவார் என்றும் சதானந்த கவுடா அறிவித்தார்.
நித்தியானந்தா ஆசிரமத்தில் போலீஸ் சூப்பிரண்டு அனுபவ் அகர்வால் தலைமையில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 3 இன்ஸ்பெக்டர்கள், 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 போலீஸ் அதிகாரிகள் ஆசிரமத்திற்கு உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர். நிருபர்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கைகலப்பில் சம்பந்தப்பட்ட சீடர்கள் யாரும் உள்ளார்களா? நித்தியானந்தா அங்கு இருக்கிறாரா? வழக்கு தொடர்பான ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என்று அவர்கள் சோதனை நடத்தினார்கள்.
இதேபோல், துணை கலெக்டர் அர்ச்சனா உள்ளிட்ட 6 அதிகாரிகள் மாலையில் ஆசிரமத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
இரவு 7 மணியளவில் கலெக்டர் ஸ்ரீராம்ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
கலெக்டர் ஸ்ரீராம்ரெட்டி நிருபர்களிடம் கூறும்போது, அரசு உத்தரவின்பேரில் நடந்து வரும் இந்த சோதனை இன்னும் 5 அல்லது 6 நாட்கள் வரை நடைபெறும். சோதனை நடைபெறுவது, வீடியோவில் பதிவு செய்யப்படும். அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு ஆசிரமத்துக்கு சீல்' வைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவித்தார்.
போலீஸ் சூப்பிரண்டு அனுபவ் அகர்வால் கூறும்போது, ஆசிரமத்தில் இருந்து சீடர்கள் உள்பட சிலர் வெளியேறி வருகிறார்கள். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகுதான் அனுப்பப்படுவார்கள். அவர்கள் ஆவணங்கள் எதுவும் எடுத்த சென்றார்களா? என்று கேட்கிறீர்கள். ஒரே ஒரு வெளிநாட்டு பெண் மட்டும் ஒரு சி.டி.யை எடுத்து செல்ல முயற்சி செய்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். அந்த சி.டி. குறித்து வெளிநாட்டு பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறோம். நித்தியானந்தாவை கைது செய்ய தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கும், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் சென்று உள்ளனர். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. உளவுத்துறை மூலம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கூடிய விரைவில் நித்தியானந்தா கைது செய்யப்படுவார்'' என்று சொன்னார்.