5-வது நாளாக நீடிக்கும் பயிற்சி டாக்டர்கள் போராட்டம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனை டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பயிற்சி டாக்டர்கள், முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறா ர்கள். டாக்டர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று 5-வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பயிற்சி டாக்டர் களின் தொடர் போராட்டத்தால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். புற நோயாளி களும், உள் நோயாளிகளும் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
பயிற்சி டாக்டர்களின் போராட்டம் ஒருபுறம் நடந்து வரும் வேளையில் அரசு டாக்டர்கள், உதவி மருத்துவர்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் அரசு டாக்டர்களும் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் டாக்டர்களை தாக்கியவர்கள் மீது நேற்று இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களது போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
ஆனாலும் பயிற்சி டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்படுவதால் அவர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காண அரசு முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணியில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் அவசர அவசரமாக இன்று சென்னை திரும்பினார். பயிற்சி டாக்டர்களின் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பிரதிநிதிகள், சென்னை அரசு பொது மருத்துவமனை முதல்வர் கனகசபையுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும் என்று தெரிகிறது. டாக்டர்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்பதில் பயிற்சி மருத்துவர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர்.
டாக்டர்களின் கோரிக்கையை ஏற்கும் பட்சத்தில் போராட்டம் வாபஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.