ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த வேண்டும்: கி.வீரமணி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அடுத்த குடியரசு தலைவர் வேட்பாளரை எதிர் அணியாக இருக்கும் ஒரு தரப்பு அறிவித்துவிட்ட நிலையில் (முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா) ஆளும் கூட்டணியாகிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்னும் தனது வேட்பாளரை ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையே தொடர்கிறது. பா.ஜ.க.வின் உட்கட்சி சண்டையும், பூசல்களும் கோஷ்டி கானங்களும் அது தனது செல்வாக்கினை கொஞ்சம் கொஞ்சமாக பல மாநிலங்களிலும் இழந்து வருகின்ற நிலையே நீடிக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக பிரபல விஞ்ஞானியும், இளைஞர்களின் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்ட பொறியாளர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை தமது வேட்பாளராக அறிவிக்கலாமே. அதனை பல எதிர்க்கட்சி வட்டாரங்களும் கூடி வரவேற்று ஆதரவு தருவதற்கு முன்வரக் கூடும். தமிழ்நாட்டுக்காரருக்கு முன்பு வட மாநிலத்தவர் ஒரு பெண்மணி- அம்மையார் பதவி வாய்ப்பை பெற்றார். தமிழ்நாட்டின் தி.மு.க.வின்- பங்கு அதன் தலைவர் கருணாநிதியின் செயலாக்கம் மிகவும் குறிப்பிடத் தக்கதாக அமைந்தது. பிரச்சினை ஏதும் இல்லாமல் அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இப்போது தேவைப்படுவது ஒரு பொது நிலையில் பல கட்சியினராலும், கட்சிக்கு அப்பாற்பட்டவராகவும் இருப்பதோடு, மனசாட்சியை அடகு வைத்துவிடாதவராக ஓர்ந்து கண்ணோடாது, தேர்ந்து முடிவு செய்யும் சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல் போன்றவரே முழு தகுதியானவர் ஆவார். அவருடைய கனிந்த அனுபவ அடிப்படையில் உலகத்தின் பார்வையை வெகுவாக ஈர்த்த சர்வதேச புகழ் பெற்றவர், ஒரு சிறு பான்மை சமூகத்தவரா னவர், அனைத்து தரப்பு டனும் அன்போடு, பண் போடு பழகும் பான்மை உடையவர் அப்துல் கலாம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய நாடான நமது நாட்டின் மக்களால் விரும்பப்படுபவர் என்ற முத்திரை பெற்றவர். ஆளும் கூட்டணியின் பொது வேட்பாளராகவே அறிவித்தால், வெற்றியும் எளிது, விவேகமான பொதுமை நிறைந்த முடிவாக அமையவும் கூடும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் அதன் தலைமையும், தோழமை கட்சிகளும் இவரை வேட்பாளராக்க முயற்சித்தல் சிறப்பானதாக அமையும்’’ என்று கூறி உள்ளார்.