கிரிக்கெட்டில் இருந்து பீட்டர்சன் திடீர் ஓய்வு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவர் கெவின் பீட்டர்சன். அந்த அணியின் பல வெற்றிகளில் முதுகெலும்பாக இருந்திருக்கும் பீட்டர்சன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் உடனடியாக ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இன்னும் 4 மாதங்களில் இலங்கையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் அவரது அறிவிப்பு இங்கிலாந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவர் முழு கவனம் செலுத்துவார்.
இது குறித்து அவர் கூறுகையில், `தற்போது சர்வதேச கிரிக்கெட் அட்டவணை கடுமையாகியுள்ளது. நிறைய சர்வதேச போட்டிகள் வருவதால், உடல்ஒத்துழைப்பு தேவையும் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டும், அடுத்த தலை முறை யினர் 2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக போதிய அனுபவம் பெறும் வகையிலும் அவர்களுக்கு வழிவிட்டு விலக இதுவே சரியான நேரமாக கருதுகிறேன். ஒரு நாள் கிரிக்கெட்டில் நான் செய்த சாதனைகள் மிகவும் பெருமை அளிக்கிறது. ஆனாலும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு எனது பெயரை தேர்வு செய்ய பரிசீலிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அணித் தேர்வுக்கான தகுதி அதிகாரப்பூர்வமாக அமலில் இல்லாத சமயத்தில் 20 ஓவர் உலக கோப்பை விளையாட தயாராகவே இருந்தேன்'என்றார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்த விதிப்படி ஒரு வீரர் 20 ஓவர் கிரிக்கெட் அல்லது ஒரு நாள் போட்டி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் விளையாட தயாராக இல்லாத பட்சத்தில் அந்த வீரர் தானாகவே 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி இரண்டுக்கும் தேர்வாகும் தகுதியை இழக்கிறார். இதனால் தான் பீட்டர்சன் 20 ஓவர் கிரிக்கெட்டையும் துறக்க வேண்டியதாகி விட்டது.
`பீட்டர்சன் உலகத்தரம் வாய்ந்த வீரர். சில மாதங்களில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடங்கி இருக்கும் நிலையில் பீட்டர்சனின் விலகல் தங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக' இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் ஹக் மோரிஸ் கூறியுள்ளார்.
31 வயதான கெவின் பீட்டர்சன் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர். அவர் இதுவரை 127 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9 சதத்துடன் 4184 ரன்களும், 36 சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாடி 7 அரைசதத்துடன் 1176 ரன்களும் சேர்த்துள்ளார். இதே போல் 85 டெஸ்டில் விளையாடி 20 சதம் உள்பட 6,779 ரன்கள் குவித்து இருக்கிறார். பீட்டர்சன், ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்சின் சாதனையை சமன் செய்தவர் ஆவார். இருவரும் தங்களது 21-வது இன்னிங்சில் இந்த இலக்கை எட்டினர்.
சர்வதேச போட்டிகளில் விடைபெற்றாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட பீட்டர்சன் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய பீட்டர்சன் டெக்கான் அணிக்கு எதிராக சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.