ஆசிரியையை மாணவன் கொலை செய்த வழக்கு: சாட்சி விசாரணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை
ஆசிரியையை மாணவன் கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
சென்னை அரண்மனைக்காரன் தெருவில் செயிண்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் ஆசிரியையாக இருந்தவர் உமா மகேஸ்வரி. இவர் 9-ம் வகுப்பில் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது அந்த வகுப்பு மாணவன் ஒருவனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இது சம்பந்தமாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றம்சாட்டப்பட்டவர் சிறு வயதுடைய மாணவர் என்பதால் இந்த வழக்கை சிறுவர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் மாணவனின் தந்தை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
’’இந்த வழக்கு விசாரணைக்காக எனது மகன் மே 23-ந் தேதி ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் மகன் ஆஜரானான். அப்போது அவனுக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. அன்றே அவன் மீதான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.
எனது மகனுக்கு தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் மே 25-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. இதுவரை 26 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணையில் சட்டப்படியான விசாரணை நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. இது நீடித்தால் எனது மகனுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே வழக்கின் சாட்சி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்தார். வழக்கின் சாட்சி விசாரணைக்கு ஜுன் 8-ந் தேதிவரை இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அன்று போலீஸ் தரப்பில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.