இணையதளத்தில் விபசார அழகியாக சித்தரித்து அவமானப்படுத்திவிட்டனர்: நடிகை காஜல் பரபரப்பு புகார்
இணைய தளத்தில் விபசார அழகியாக சித்தரித்து, எனது படத்துடன் விளம்பரப்படுத்தி அவமானப்படுத்தி விட்டனர் என்று நடிகை காஜல் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோ தமிழ் படத்தில் நக்சலைட்டு தீவிரவாதியாக நடித்து, பிரபலமானவர் நடிகை காஜல் (34). இவர் நடிகர் விவேக்குடன் காமெடி காட்சிகளிலும் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இவருக்கு தமிழ்செல்வி என்ற பெயரும் உள்ளது. நடிகை காஜல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், ''தனியார் இணையதளம் ஒன்றில் எனது படத்தை வெளியிட்டு, எனது செல்போன் நம்பரையும் கொடுத்து, நானே பேசுவது போல ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளனர். விபசார அழகி போல என்னை சித்தரித்து அந்த விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. என்னை யாரும் திருப்தி படுத்த முடியாது, முடியும் என்று நினைப்பவர்கள் எனது செல்போனில் தொடர்பு கொள்ளவும், என்னை திருப்தி படுத்துபவர்களுக்கு, கணிசமான தொகையும் கிடைக்கும் என்று நானே சொல்வது போல அந்த விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தை பார்த்து, ஏராளமானவர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசி அவமானப்படுத்தி விட்டனர். இப்போது அந்த விளம்பரத்தை நிறுத்தி விட்டனர். மே 23 மற்றும் 24 ஆகிய 2 தேதிகளில் அந்த விளம்பரம் வெளியானது. அதன்பிறகு அதை நிறுத்தி விட்டனர். பொய்யான இந்த விளம்பரத்தை வெளியிட்டு, என்னை அவமானப்படுத்தியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.