கேன்ஸ் பட விழாவில் நடிகை ஐஸ்வர்யாராய்
பிரான்சு நாட்டில் கேன்ஸ் பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் தொடர்ந்து 11வது ஆண்டாக நடிகை ஐஸ்வர்யாராய் கலந்துகொண்டுள்ளார். இந்த முறை பிறந்து 6 மாதமே ஆன தனது செல்ல மகள் ஆரத்யாவுடன் அவர் பங்கேற்றிருப்பது சிறப்பு. அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேன்ஸ் படவிழாவின் ஒரு அங்கமாக, பிரெஞ்சு ரிவைரா ஓட்டலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யாராயிடம், "குழந்தை வளர்ப்பால் தொழிலில் பாதிப்பு ஏற்படுகிறதா?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளித்து பேசுகையில், "குழந்தையை வளர்ப்பது தாய்மைக்கடமை. இதனால் தொழிலில் பாதிப்பு ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. இந்த வாழ்க்கையில் நீண்ட காலமாக இருக்கிறேன். வாழ்க்கைப்பாதையில் வாலிபப்பருவத்தை கடந்து வந்து இருக்கிறோம். பல்வேறு பணிகளால் 24 மணி நேரமும் இயங்கி வருகிறோம். உறக்கமில்லாத இரவுகளைப் பற்றி நாம் எல்லோரும் பேசுகிறோம். அதுதான் நமது வாழ்க்கைமுறையாகி இருக்கிறது. அது நமது குழந்தை என்று வருகிறபோது நாம் குறை கூற முடியாது'' என்றார்.
குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் ஐஸ்வர்யாராய் குண்டாகி விட்டார் என கூறி அதற்கு எதிராக விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் கேன்ஸ் பிரெஞ்சு ரிவைரா ஓட்டலில் அவரைப் பார்க்க கூட்டம் மோதியது குறிப்பிடத்தக்கது.