தொழில் அதிபர் கொலை! கணவருடன் தலைமறைவாகிவிட்ட கள்ளக்காதலியை தேடுகிறது போலீஸ்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்தவர் கோயில்ராஜ் (வயது 50). ரியல் எஸ்டேட், காண்ட்ராக்ட் போன்ற தொழில்கள் செய்து வந்தார். அவருடைய மனைவி வசந்தா (35). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கோயில்ராஜ் தினமும் காலையில் நடைப் பயிற்சி செல்வார்.
வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் செல்லும் அவர் ஒரு இடத்தில் அதை நிறுத்தி விட்டு ராஜமன்னார்புரம் வரை நடைபயிற்சி சென்று விட்டு, வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். வழக்கம் போல் நேற்றும் காலையில் கோயில்ராஜ் நடைபயிற்சிக்கு சென்றார்.
நடை பயிற்சியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது எதிரே வந்த ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதில் கோயில்ராஜ் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். ஜீப்பை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோயில்ராஜ் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் விபத்து என்றுதான் முதலில் போலீசார் நினைத்தனர். ஜீப்பை சோதனை செய்த போது அதில் 2 அரிவாள்கள், 2 மதுபான பாட்டில்கள், திருமண அழைப்பிதழ் ஆகியவை கிடந்தன. போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் கோயில்ராஜ், ஜீப்பை ஏற்றி கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அது பற்றிய விவரம் வருமாறு:-
கோயில்ராஜுக்கும் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி லில்லி எஸ்தர் (35) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. வீட்டில் கணவன் இல்லாத நேரத்தில் லில்லி எஸ்தர், கோயில்ராஜுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் கோயில்ராஜ் கொடுத்த பணத்தில் புதிய வீடு ஒன்றை லில்லி எஸ்தர் கட்டினார்
அதன் பிறகு கோயில்ராஜின் உறவு கசக்க தொடங்கியதால் லில்லி எஸ்தர் வேறு ஒருவருடன் பழகியதாக தெரிகிறது. இதை கோயில்ராஜ் தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால், தான் இதுவரை கொடுத்த பணத்தை கோயில்ராஜ் திருப்பி கேட்டார். ஆனால் லில்லி எஸ்தர் கொடுக்க மறுத்ததால், அதுபற்றி தட்டார்மடம் போலீசில் கோயில்ராஜ் புகார் செய்தார்.
கோயில்ராஜ் பணபலமும், ஆள்பலமும் உள்ளவர் என்பதால் எப்படியும் மிரட்டி பணத்தை வசூலித்து விடுவார் என்று பயந்த லில்லி எஸ்தர் தனது கணவருடன் சேர்ந்து திட்டமிட்டு கோயில்ராஜை கொலை செய்து இருக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தலைமறைவாகிவிட்ட லில்லி எஸ்தர் மற்றும் அவருடைய கணவர் கனகராஜ் இருவரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.