யானைகள் கணக்கெடுப்பு 22-ந் தேதி தொடக்கம்
தமிழ்நாட்டில் யானைகள் கணக்கெடுப்பு வரும் 22-ந் தேதி (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர்.
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை யானைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2007-ம் ஆண்டு யானைகள் கணக்கெடுக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 22-ந் தேதி (செவ்வாய்கிழமை) முதல் 3 நாட்களுக்கு, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, கோவா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி இந்த யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த பணியில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்த யானைகள் கணக்கெடுப்பு 3 முறைகளில் நடத்தப்படுகிறது. அதாவது, நேரடியாக யானைகளை கண்டு கணக்கிடுதல், காலடி தடங்களை வைத்து கணக்கிடுதல், நீர்நிலைகளில் பதியும் யானைகளின் கால் தடங்களை வைத்து கணக்கிடுதல் என்று 3 முறைகள் பின்பற்றப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின்போது, வயதான யானைகள், இளம் யானைகள், குட்டி யானைகள், ஆண் - பெண் பாலினம் உள்ளிட்ட அம்சங்கள் கணக்கிடப்படும்.
இந்தப் பணியில் ஈடுபடும் வனத்துறையினர், தன்னார்வலர்கள் யானைகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் கணக்கெடுப்பை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுக்க செல்பவர்கள் யானைகளை கேமரா மூலம் புகைப்படமும் எடுக்க இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் யானைகள் கணக்கெடுப்பு வரும் 22, 23, 24 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த 5 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கும் என்று நம்பப் படுவதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.