விஜயகாந்த் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. பேச்சு! தேமுதிக எதிர்ப்பு!
சட்டப் பேரவையில் விஜயகாந்த் குறித்து அதிமுக உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற வனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன் (ஆண்டிபட்டி), "கட்சி ஆரம்பித்த நடிகர்களில் எம்.ஜி.ஆரால் மட்டுமே ஆட்சிக்கு வர முடிந்தது. நடிப்பில் சாதனை படைத்த சிவாஜி கணேசனால் அரசியலில் நீடிக்க முடியவில்லை. பாக்யராஜ், டி. ராஜேந்தர் போன்றவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது' என்றார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் குறித்து சில கருத்துகளை அவர் தெரிவித்தார். அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
அப்போது பேசிய தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார், அதிமுக தொடங்கப்பட்டது குறித்து சில கருத்துகளைக் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் எழுந்து நின்று கோஷமிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த் குறித்து அதிமுக உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விடலாம் என்றார்.