நாடாளுமன்றத்தின் கெளரவத்தைக் காக்க இரு அவைகளிலும் தீர்மானம்
நாடாளுமன்றத்தின் கெளரவம், புனிதம், மேன்மை ஆகியவற்றை காப்பது என்றும்; அதனை தொடர்ந்து கடைப்பிடிப்பது என்றும் ஞாயிற்றுக்கிழமை (13.05.2012) மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு உருவாகி 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நடைபெற்ற நீண்ட விவாதத்துக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உறுப்பினர்களின் குரல் வாக்கு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மக்களவையில் அதன் தலைவர் மீரா குமாரும்; மாநிலங்களவையில் அதன் தலைவர் ஹமீத் அன்சாரியும் அறிவித்தனர்.
"நாடாளுமன்றத்தை உருவாக்கிய எங்களது முன்னோர்களின் லட்சியங்களை நோக்கி முழுமையாகவும் பணிந்தும் நடப்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் நாடாளுமன்றத்தின் கெளரவம், புனிதம், மேன்மை ஆகியவற்றை காப்பாற்றுவோம், ஜனநாயக மதிப்புகளையும் கொள்கைகளையும் வலுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான கருவியாக நாடாளுமன்றத்தை மாற்றுவோம், நாடாளுமன்றத்தின் பார்வையின் கீழ் மக்களுக்கான அரசின் பொறுப்புடைமையை விரிவு படுத்தப் பாடுபடுவோம்.தேசத்தை உருவாக்கும் புனிதப் பணியில் எங்களை நாங்கள் மறு அர்ப்பணிப்பு செய்து கொள்வோம்' என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.