3 யானைகள் மரணம் : வனத்துறை அதிர்ச்சி
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில், இரு நாட்களில் மூன்று யானைகள் இறந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில், யானை இறந்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் வித்யாதரன் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு செய்ததில், இறந்தது 35 வயதுடைய பெண் யானை என்பதும், யானையின் வயிற்றில் ஏற்பட்ட நாள்பட்ட புண்ணால் இறந்ததும் தெரியவந்தது.
யானையின் உடலை வனத்துறையினர் முன்னிலையில், புலிகள் காப்பக கால்நடை டாக்டர் கலைவாணன் பிரேதப் பரிசோதனை செய்தார். நேற்று காலை, கீழ்நாடுகாணி தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஜீப்பில், ஓவேலி பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்றுக் கொண்டிருந்தனர். ஓவேலி அருகே சாலையோரம், குட்டி யானை இறந்திருந்தது; இதனருகில், மற்றொரு யானை ஆக்ரோஷத்துடன் நின்றிருந்தது. இந்த யானை, தொழிலாளர்களை விரட்டிய நிலையில், இவர்கள் தப்பினர். தகவலறிந்த வனச்சரகர் முத்துசாமி, வனவர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்த போது, 10 வயதுடைய குட்டி ஆண் யானை என தெரியவந்தது.வனச்சரகர் முத்துசாமி கூறுகையில், ""வயிற்றுப்போக்கு காரணமாக யானை இறந்திருக்கும். அருகிலுள்ள யானைகளை விரட்டிய பின், பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்; இதற்கு பின் காரணம் தெரியவரும்,'' என்றார்.அதேபோல், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டக்கெட்டா வனப்பகுதியில், இறந்த யானையின் உடலை உதவி வனப்பாதுகாவலர் ராஜாங்கம் முன்னிலையில், டாக்டர் கலைவாணன் பிரேதப் பரிசோதனை செய்தார். மூன்று யானைகள் இறந்ததுள்ளது, வனத்துறையினர், சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.