குட்டி விமானம் மோதி வியாபாரி பலி
டெல்லியை சேர்ந்தவர் யோகேஷ் கார்க். வர்த்தக பிரமுகர். இவர் சொந்தமாக ஒரு லகு ரக குட்டி விமானம் வாங்கி இருந்தார். அதை ஓட்டுவதற்காக பயிற்சி எடுக்க உத்தரபிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், பார்த்தாப்பூர் விமான நிலைய பயிற்சி தளத்துக்கு சென்று இருந்தார்.
அங்கு ஒரு லகு ரக குட்டி விமானம் வானத்தில் பறந்து விட்டு ஓடு பாதையில் இறங்கியது. அப்போது யோகேஷ் கார் அந்த விமானத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். விமானம் ஓடு பாதையில் இறங்கியபோது அதன் ஒரு சக்கரம் திடீரென உடைந்து தனியாக கழன்று ஓடியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய குட்டி விமானம், யோகேஷ் கார்க் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தில் விமானத்தை ஓட்டி வந்த 2 விமானிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. யோகேஷ் கார்க் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.