எடியூரப்பாவுக்கு ஆதரவாக 7 மந்திரிகள் ராஜினாமா
கர்நாடகத்தில் சுரங்க முறைகேடு புகாரில் சிக்கிய எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததால், அவருக்கு பதிலாக சதானந்த கவுடா புதிய முதல்-மந்திரி ஆனார்.
சுரங்க முறைகேடுகளில் எடியூரப்பாவின் தொடர்பு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால், அவருக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து எடியூரப்பா தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், எடியூரப்பா மற்றும் அவருடைய ஆதரவு மந்திரிகளுக்கு எதிராக புகார் தெரிவித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்-மந்திரி சதானந்த கவுடா பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரிக்கு ரகசிய கடிதம் எழுதிய விவரம் வெளியானது.
இதனால் கோபம் அடைந்துள்ள எடியூரப்பாவின் ஆதரவாளர்கள், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சதானந்த கவுடாவுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் அதை நிராகரித்து விட்டார்.
இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்துவதற்காக நேற்று மாலை பெங்களூரில் உள்ள எடியூரப்பாவின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முதல்-மந்திரி சதானந்த கவுடாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் எடியூரப்பா ஆதரவு மந்திரிகளான ஷோபா கரண்ட்லாஜே, பசவராஜ் பொம்மை, உமேஷ் கட்டி, சி.எம்.உதாசி, வி.சோமண்ணா, எம்.பி.ரேணுகாச்சார்யா, முருகேஷ் நிராணி ஆகிய 7 பேர் நேற்று மாலை தங்கள் ராஜினாமா கடிதங்களை எடியூரப்பாவிடம் கொடுத்தனர்.
மேலும் அவரது ஆதரவு பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் எடியூரப்பாவிடம் ராஜினாமா கடிதங்களை கொடுத்து இருப்பதாக எடியூரப்பா ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜினாமா கடிதத்தின் மீது எடியூரப்பா உரிய முடிவை எடுப்பார் என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள்.
எடியூரப்பா ஆதரவாளர்களின் இந்த அதிரடி நடவடிக்கையால் சதானந்தா தலைமையிலான பாரதீய ஜனதா அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எடியூரப்பா புதிய கட்சி தொடங்குவது பற்றி பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றும் முயற்சியாக, எடியூரப்பாவை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் பாரதீய ஜனதா மேலிடம் ஈடுபட்டு உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சதீஸ் நேற்று எடியூரப்பாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, பாரதீய ஜனதாவை விட்டு விலகுவது குறித்து அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று எடியூரப்பாவை அவர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.