ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கொள்ளை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்ததும் அதிர்ச்சி
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிரண்குமார். இவர் தனியார் கம்யூட்டர் நிறுவனத்தில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஆஷாவின் தங்கை சிங்கப்பூரில் வசிப்பதால் கோடை விடுமுறைக்காக கிரண்குமாரும் அவரது மனைவியும் பிள்ளைகளும் கடந்த மாதம் 24ஆம் தேதி சிங்கப்பூர் சென்றனர்.
நேற்று அதிகாலை சென்னை திரும்பினர். அப்போது கிரண்குமாரின் வீடு உடைக்கப்பட்டிருந்தது. கதவு, ஜன்னல்கள் அனைத்தும் தனியாக பெயர்த்து எடுக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வைர மோதிரங்கள், 7 தங்க சங்கிலிகள் உள்பட ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கிரண்குமார் சேத்துபட்டு காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். கைரேகை நிபுணர்களும், போலீஸ் மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.