பொதுமக்கள் புகார்! நிலத்தடி நீர் மாசடைய காரணமான இரசாயன தொழிற்ச்சாலைக்கு சீல்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்துள்ள மூக்கண்டப்பள்ளியில் நிலத்தடி நீர் மட்டம் மாசுபடக் காரணமான “சிப்காட்” வளாகத்தில் தொழிற்சாலையை மூடுமாறு கலெக்டர் மகேஷ்வரன், அதிரடியாக உத்தரவிட்டார்.
ஓசூர் நகராட்சிக்குட்ப்பட்ட, 15 மற்றும் 16வது வார்டில் மூக்கண்டப்பள்ளி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நகர், நேதாஜி நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியையொட்டி சிப்காட் பகுதியில் பல இரசாயன தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.
அந்த ஆலைகளுள் ஒன்றான “மேக்ஸ் சர்பஸ் ஸ்ட்ரீட்மெண்ட்” என்ற தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீரால், மூக்கண்டப்பள்ளி பகுதி நிலத்தடி நீர் மட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் இரசாயன கழிவுநீரை சுத்தம் செய்யாமல் நேரடியாக திறந்த வெளியிலும், தங்களது ஆலைக்கு உள்ளே உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் விடப்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார் கூறினார்கள்.
இந்த தண்ணீரை பயன்படுத்திய மக்களுக்கு பல்வேறு தோல் நோய் பரவியது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரன் அவர்களை நேரில் சந்தித்து சிலர் புகார் கொடுத்தான்ர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஓசூர் துணை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வட்டச்சியர் இலட்சுமி நாராயணன், நகராட்சி ஆணையாளர் தணிக்காசலம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் ஆழ்துளை கிணறுகளில் வந்த மாசு அடைந்த தண்ணீரையும், மூக்கண்டப்பள்ளி “மேக்ஸ் சர்பஸ் ஸ்ட்ரீட்மெண்ட்” தொழிற்சாலையில் வெளியாகும் இரசாயன கழிவு நீரையும் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த பரிசோதனையில், இந்த தொழிற்சாலையில் இருந்து வீணாகும் இரசாயன கழிவு நீர் மூலமாகதான், மூக்கண்டப்பள்ளி பகுதி நிலத்தடி நீர் மாசு அடைந்தது என்று தெரியவந்தது.
இந்நிலையில் ஆட்சியர் மகேஷ்வரன், 03.05.2012 அன்று சம்பந்தப்பட்ட “மேக்ஸ் சர்பஸ் ஸ்ட்ரீட்மெண்ட்” தொழிற்சாலையை மூடி ஷீல வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, துணை ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் வட்டாட்சியர் இலட்சுமி நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த தொழிற்சாலைக்கு சென்று "சீல்' வைத்து மூடியுள்ளனர்.