காவிரி குடிநீரை சுத்திகரிக்க கங்கையிலிருந்து மணல் கொண்டு வர நடவடிக்கை
சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டத்திற்கு, காவிரியில் எடுக்கும் நீரை சுத்திகரிக்க, கங்கை ஆற்றுப்படுகையில் இருந்து, 25 யூனிட் அளவிலான மணலும், அதே அளவிலான கூழாங்கற்களும் மேட்டூரில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
சேலம் மாநகராட்சியில், 2011 ல் மக்கள் தொகை ஏழு லட்சமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்திருந்தது. இவர்களின் தேவைக்கு மாநகராட்சி பகுதிக்கு, 2.25 முதல் 2.60 கோடி லிட்டர் வரை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அனால், சேலம் மாநகர மக்கள் தொகை திட்டமிட்ட இலக்கை கடந்து, 2010ல் எட்டு லட்சமாக அதிகரித்தது, அதனால், சேலம் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு உருவானது.
எனவே, 2025ல் சேலம் மாநகராட்சி மக்கள் தொகை, 10.52 லட்சமாகவும், 2040ல் 13.24 லட்சம் இருக்கும், என கணக்கிட்டு, 2025ல் நாள் ஒன்றுக்கு 15.5 கோடி லிட்டர் தேவை இருக்கும் எனவும், 2040ல் நாள் ஒன்றுக்கு, 20 கோடி லிட்டர் குடிநீர் தேவை இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
அதற்காக 283.09 கோடி மதிப்பில் சேலம் மாநகராட்சி மட்டும் என ஒரு தனி குடிநீர் திட்ட பணியை துவங்கியது. அதற்கென மேட்டூர் காவிரி கரையோரம் 2010 ஆகஸ்ட் 1ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது, அந்த பணிகளுக்கு கூடுதலாக, 37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் தொட்டில்பட்டியில், 15.5 கோடி லிட்டர் குடிநீரை சுத்திகரிக்க, இரண்டு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், காவிரி குடிநீரை சுத்திகரிக்க, 25 யூனிட் கங்கை ஆற்றுப்படுகை மணல் மற்றும் கூழாங்கற்கள் கொட்டப்படவுள்ளது என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் அசோகன் தெரிவித்தார்.
மேலும், அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, குடிநீரை சுத்திகரிக்கும் தரமான மணல் மற்றும் கூழாங்கற்கள் இந்தியாவில் கங்கையாற்று படுகையில்தான் காணப்படுகிறது. எனவே, நாடு முழுவதும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உபயோகிக்க கங்கை மணல் மற்றும் கூழாங்கற்களையே பயன்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்கிறது.
அதன்படி, சேலம் மாநகராட்சி குடிநீரை சுத்திகரிக்க, கோத்ரா என்ற இடத்தில் இருந்து கங்கையாற்று மணல் 25 யூனிட்டுகள் அதே அளவிலான கூழாங்கற்கள் லாரிகள் மூலம் மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டியில் உள்ள சேலம் மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.