அரை பவுன் தோடுக்காக ஆடு மேய்க்கும் பெண் அடித்து கொலை
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ளது ஏத்தாப்பூர். இந்த ஊரில் உள்ள 5வது வார்டு கணேசபுரத்தை சேர்ந்த சின்னு என்பவரின் மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் தங்களுக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை பக்கத்தில் உள்ள வசிஷ்ட நதியின் கரைகளில் ஓட்டிச்சென்று மேயத்துவருவார்.
அய்யம்மாள் தனது ஆடுகளை கணேசபுரம் நீரோடை வழியாக மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார். மாலையில் வழக்கம்போல மேய்ச்சலுக்கு போன ஆடுகள் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டது. ஆனால், ஆடு ஓட்டிச் சென்ற அய்யம்மாள் மட்டும் வீடு திரும்பாததால், அவர்களது உறவினர்கள் ஆற்றங்கரை மற்றும் நீரோடை பகுதியில் சென்று தேடியுள்ளனர்.
அப்போது, நீரோடையின் ஒரு கரையில் அய்யம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். அவரது காதில் இருந்த தோடுகளையும் காணவில்லை. அரை பவுன் தோடுக்காக அவரை கொலை செய்து யாரோ தப்பியோடியுள்ளனர் என்று அய்யம்மாளின் உறவினர்கள் ஏத்தாப்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ்குமார் நிகழ்விடத்துக்கு வந்து அய்யம்மளின் உடலை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.