அமைச்சர் சரத்பவார் பதவி விலகி, தெருவில் இறங்கி விவசாயிகளுக்காக பாடுபடவேண்டும்: உத்தவ் தாக்கரே
மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் பதவி விலகி, விவசாயிகளுக்காக பாடுபடவேண்டும்'' என, சிவசேனா கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மால் பகுதியைச் சேர்ந்த விவசாயி கஜனான் கோட்டேகார், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டிற்கு சென்ற சிவசேனா கட்சி செயல் தலைவர் உத்தவ் தாக்கரே, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயி குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
விவசாயி கஜனான் கோட்டேகார் தற்கொலை செய்யும் முன், "விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியது காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தான்' என, கடிதம் எழுதி வைத்துள்ளார். மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான, சரத்பவார், மகாராஷ்டிரா விவசாயிகளின் நலன்களை புறக்கணித்து விட்டார்.
ஆனால், அவர் புதுடில்லியில் விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முதலில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும். பின்னர், மாநிலத்திற்கு வந்து தெருவில் இறங்கி, விவசாயிகளின் பிரச்னைகளுக்காக போராட வேண்டும் என்று தெரிவித்தார்.