குடிபோதையில் ரகளை: இரவு முழுவதும் லாக்கப்பில் வைக்கப்பட்ட பி.சி.சி.ஐ., தலைவர் மகன் ஜாமினில் விடுவிப்பு
குடித்து விட்டு போலீசாரை தாக்கிய பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மகன் அஷ்வின் கைது செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். இவரது மகன் அஷ்வின், 40. தனது நண்பருடன் மும்பையில் உள்ள பிரபலமான "பார்' ஒன்றுக்கு சென்றுள்ளார்.
இரவு 1.30 மணிக்கு மேல், தொடர்ந்து மது கொண்டு வருமாறு கேட்டுள்ளார். ஆனால், பாரை மூடும் நேரம் என்பதால், ஊழியர்கள் தர மறுத்து "பில்' ரூ. 30 ஆயிரத்தை கட்டிவிட்டு உடனே வெளியேறுமாறு கூறியுள்ளனர்.
மது தரவில்லை என்றால், பணம் கட்ட முடியாது என்று அஷ்வின் தகராறு செய்திருக்கிறார். பின் "பார்' ஊழியரை அடித்துள்ளார். பின் அங்கு வந்த போலீசாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 02.05.2012 அன்று இரவு முழுவதும் "லாக்கப்பில்' வைக்கப்பட்ட இவர், அடுத்த நாள் காலை கோர்ட்டில் ஆஜராகி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து டி.சி.பி., பிரதாப் டிகாவோகர் கூறுகையில்,"" மது தர மறுத்ததால், ஊழியரை அஷ்வின் அடித்துள்ளார். பின் எங்களிடம் புகார் தெரிவித்ததால் அங்கு சென்றோம், போதையில் இருந்த அவரிடம், பில்லை செலுத்தி விட்டு செல்லுமாறு கூறினோம். உடனே, எங்களையும் தாக்கினார். இதையடுத்து அவரை கைது செய்து, தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தோம்,'' என்றார்.