லண்டனில் தமிழ்த் தேசியக் காங்கிரஸ் உருவாக்கம்
ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்கும் விதத்தில் இலங்கை தமிழ்க் கட்சிகளின் பிரிட்டிஷ் கிளைகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் காங்கிரஸ் என்ற புதிய அமைப்பை லண்டனில் உருவாக்கியிருக்கின்றன.
இலங்கையைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ரெலோ, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் ஒருங்கிணைந்து தமிழ்த் தேசிய காங்கிரஸை உருவாக்கியுள்ளன. இக்கட்சிகளின் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தின் நோக்கம் பற்றி, தமிழ்த் தேசிய காங்கிரஸின் நிறுவன உறுப்பினர்களின் ஒருவரும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பிரிட்டிஷ் கிளை செயலருமான சண்முகராஜா அரவிந்தன் கூறுகையில், ’இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் வன்முறையின்றி, அமைதித் தீர்வு ஒன்று, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் காணப்படவேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் நோக்கம்’’ என்று தெரிவித்துள்ளார்.