வரலாறு காணாத விலை உயர்வு:ஒரு பவுன் தங்கம் விலை 22 ஆயிரத்தை தொட்டது
வரலாறு காணாத வகையில் தங்கம் விலை நேற்று ரூ.22 ஆயிரத்தை தொட்டது.
எப்போதும் ஏறுமுகமாக இருக்கும் தங்கம் விலை வரலாற்று சாதனை படைத்துள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி எதிரொலி மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியே தங்கம் விலை, உயர்வுக்கு முக்கிய காரணம். இதனால், பலரும் தங்கள் பணத்தை தங்கத்தின் மீது அதிகமாக முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர்.
முதல் முறையாக 2009-ம் ஆண்டு ஒரு பவுன் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆயிரத்து 332 ரூபாய்க்கு விற்பனையானது. 2010-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.12 ஆயிரத்து 784-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இப்படி படிப்படியாக உயர்ந்து வந்த தங்கம் அதே ஆண்டில் ரூ.16 ஆயிரத்தையும் கடந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு பவுன் தங்கம் 20 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 920-க்கு விற்பனை ஆனது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.80 அதிகரித்து ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலை உயர்வு குறித்து தங்க நகை விற்பனையாளர்கள் கூறும்போது, "வரும் மாதங்களில் சுபகாரியங்கள் நடத்துவதற்கான நல்ல நாட்கள் அதிகம் உள்ளன. திருமணம் மற்றும் விழாக்களுக்காக தங்கம் வாங்குபவர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அதிகப்படியான தங்கத்தை இறக்குமதி செய்யவேண்டிய நிலை உள்ளது. எனவே தங்கம் விலையில் ஏற்றம் இருக்குமே தவிர இறக்கம் இருக்க வாய்ப்பில்லை'' என்று கூறினார்கள்.