அன்னா ஹசாரேயை சந்திக்க பால்தாக்கரே மறுப்பு
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயை சந்திக்க, சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே மறுத்து விட்டார். இருப்பினும், மகாராஷ்டிரா நிவநிர்மாண் சேனா கட்சித் தலைரான ராஜ் தாக்கரே சந்தித்துப் பேசினார்.
மகாராஷ்டிராவில், பலமான லோக் ஆயுக்தாவை உருவாக்க வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், சமூக சேவகர் அன்னா ஹசாரே சந்தித்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் அவர், மும்பையில், மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான், துணை முதல்வர் அஜித்பவார் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
அப்போது, தன்னால் தயாரிக்கப்பட்ட லோக் ஆயுக்தா வரைவு மசோதா நகலை, சவானிடம் வழங்கினார்.
சட்டசபையில், லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற் றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதன்பின், சிவசேனா தலைவர் பால்தாக்கரேயைச் சந்திக்க, ஹசாரே விரும்பினார். இதை அறிந்த பால்தாக்கரே, அவரை சந்திக்க மறுத்து விட்டார். தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே,
மும்பையில் இல்லாத போதும், இதுகுறித்து கூறுகையில், "என் தந்தை (பால் தாக்கரே) ஹசாரேயே சந்திக்க மாட்டார். ஹசாரேயை சுற்றியுள்ளவர்கள் ஊழல் செய்தவர்கள். அவர்கள் ஹசாரே இயக்கத்தில் இருக்கும் வரை, என் தந்தை அவரை சந்திக்க மாட்டார்' எனக் கூறினார்.
இருப்பினும், சிவசேனா கட்சியில் இருந்து விலகி, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியைத் துவக்கி நடத்தி வரும், ராஜ் தாக்கரேயும், அவரது குடும்பத்தினரும், ஹசாரேயைச் சந்தித்தனர். ஹசாரேக்கு பலத்த வரவேற்பு அளித்த அவர்கள், அவருக்கு சால்வையும் வழங்கினர்.