ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வரதட்சணை கொடுமை வழக்கு
ஐ.பி.எஸ்., பயிற்சி அதிகாரி வருண்குமார் மற்றும் அவரின் பெற்றோர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசில், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐ கோர்ட்டில் பிரியதர்ஷிணி தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷிணி. ஐ கோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மனுவில், ‘’ நானும், திருச்சியைச் சேர்ந்த வருண்குமார் என்பவரும், காதலித்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார்.
சிவில் சர்வீஸ் தேர்வில், வருண்குமார் வெற்றி பெற்றார். தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, அவருக்கு நான் உதவினேன். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பின், வருண் மற்றும் அவரின் பெற்றோரின் நடவடிக் கையில் மாற்றம் ஏற்பட்டது.
இரண்டு கிலோ தங்கம், 50 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பி.எம்.டபிள்யூ., கார் தந்தால் தான் திருமணம் என கூறினர். போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன்.
மாவட்ட சமூக நலத்துறை விசாரணைக்கு பரிந்துரைக் கப்பட்டது. அவரிடம் இருந்து அறிக்கை பெற்று, என் புகார் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’என்று கூறியுள்ளார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, ’’கவுன்சிலிங் அல்லது செட்டில்மென்டுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து, வருண்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், சட்டப்படி விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்’’என, கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி நாகமுத்து முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. பிரியதர்ஷிணி சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், செந்தில்குமார் ஆஜராகினர். போலீஸ் தரப்பில், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் மகாராஜா ஆஜராகி, மனுதாரர் புகார் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார்.
பிரியதர்ஷிணி அளித்த புகாரின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் வருண்குமார், தந்தை வீரசேகரன், தாய் கல்பனா மீது, வரதட்சணை கொடுமை, நம்பிக்கை மோசடி, மிரட்டல் பிரிவுகளின் கீழ், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின்கீழும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.