பிரதமர் கிலானி குற்றவாளி! '30 வினாடிகள்' தண்டனை வழங்கி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிரான வழக்கை விசாரிக்க உத்தரவுகளை பிறப்பிக்கத் தவறிய பிரதமர் யூசுப் ரஸா கிலானி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அந்த நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனினும் இந்த வழக்கில் அவருக்கு சிறைத்தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை. அடையாள தண்டனை 30 வினாடிகளுக்கு மட்டும் சிறைத் தண்டனை வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து தனது ஆதரவாளர்கள் புடைசூழ புன்னகையுடன் கிலானி வெளியேறினார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி முறைகேடாக பல நாடுகளில் சொத்து சேர்த்து வைத்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ளார் என்றெல்லாம் புகார்கள் எழுந்தன. ஆனால், முஷாரப் பொதுமன்னிப்பு அளித்ததையடுத்து இந்த விவகாரம் தணிந்துவிட்டது.
ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. சர்தாரி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். இதுகுறித்து சுவிட்சர்லாந்துக்கு கடிதம் எழுத வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானியை உச்சநீதிமன்றம் பணித்தது.
இந்த வழக்கையொட்டி கிலானி சில தடவைகள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். பாகிஸ்தான் அதிபர் என்ற முறையில் சர்தாரிக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இம்யூனிட்டி எனப்படும் பாதுகாப்பு உள்ளது.
எனவே, சர்தாரி விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன், சுவிட்சர்லாந்துக்கு கடிதமும் எழுத மாட்டேன். சிறைக்கு செல்ல வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன் என்று கிலானி கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இன்று (26.04.2012) காலை தீர்ப்பளித்தது. பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றவாளி தான் என்று தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் குறிப்பிட்டார்.
கிலானிக்கு வருடக்கணக்கில் தண்டனை கிடைக்கும். அவர் தகுதி இழப்புக்கு ஆளாவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் இத்தகைய நடவடிக்கையை எடுக்கவில்லை. அடையாளப்பூர்வமாக அரைநிமிடம் மட்டுமே கிலானிக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நீதிபதிகள், நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் வரைதான் இந்த தண்டனை என்று வரையறை செய்யப்பட்டதால் இவ்விவகாரம் அதிர்வலைகள் எதையும் ஏற்படுத்தவில்லை.
கிலானிக்கு அரைநிமிடம் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது என்ற போதிலும் தண்டனை வழங்கப்பட்டுவிட்டதால் அவர் தகுதி இழப்புக்கு ஆளாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. எனவே சிக்கலில் இருந்து கிலானி முழுமையாக விடுபடவில்லை என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக உச்சநீதிமன்றத்திற்கு தனது மகன் அலிமூசா மற்றும் மந்திரிகள் புடைசூழ கிலானி வந்தார். அவர் மீது வழிநெடுக ரோஜாப்பூ இதழ்களை மலர்மாரி பொழிந்தனர். உச்சநீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்தனர்.