ஹசாரேவுடன் ராம்தேவ் உண்ணாவிரதம்
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா கொண்டுவர வேண்டும் என்பதில் சமூக சேவகர் அன்னாஹசாரே உறுதியாக இருக்கிறார்.
இதனால் மத்திய அரசு லோக்பால் மசோதா நிறைவேற்ற சம்மதித்தது. இதற்கான மசோதா பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டது. ஆனால் டெல்லி மேல்-சபையில் விவாதத்தின் போது அமளி ஏற்பட்டதால் நிறைவேறவில்லை.
எனவே தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே மீண்டும் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று அவர் புதுடெல்லியில் பாபா ராம்தேவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம்,
’’வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றினால் பல அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவர். அதனால் இந்த மசோதாவை கொண்டுவர மத்திய அரசு பயப்படுகிறது. ஊழலுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூன் 3-ந்தேதி மீண்டும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.