டெல்லியில் சாகச நிகழ்ச்சியின் போது வாலிபர் பலி! பிரபல நடிகை காயம்!
டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் கிரேட் அட்வென்ச்சர் மால்' என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா 07.04.2012 அன்று நடைபெற்றது. மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுபோத் காந்த் சகாய் இதை திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு பல்வேறு சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் ஒன்று கயிற்றில் தொங்கிய படி கீழே இறங்கும் பங்கி ஜம்பிங் நிகழ்ச்சியும் ஒன்று.
சைலேந்திர குமார் (வயது 25) என்ற பங்கி ஜம்பிங் பயிற்சியாளர் கயிற்றில் தொங்கியபடி சாகசம் நிகழ்த்திய போது, எதிர்பாராத விதமாக அந்த கயிறு அறுந்தது. இதனால் 7 வது மாடி பகுதியில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் கீழே தரையில் விழுந்தார்.
ஏராளமான பார்வையாளர்கள் கண்முன்னே இந்த கோர விபத்து நடந்தது. இதைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சைலேந்திர குமாரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.
'
இதேபோல் அங்கு நடந்த ஜீப் பந்தயத்தில் முன்னாள் இந்திய அழகியும் பிரபல இந்தி நடிகையுமான சாயாலி பகத் (28) கலந்து கொண்டார். அப்போது சாயாலி பகத் ஓட்டிச் சென்ற ஜீப் திடீரென்று கவிழ்ந்ததில் அவர் காயம் அடைந்தார். இதனால் அவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்; சாகச நிகழ்ச்சிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.