அரசு நிலத்தை பிளாட் போட்டு விற்க முயற்சி
சென்னை: மாதவரத்தை அடுத்த சூரப்பட்டு பிருந்தாவனம் நகரில் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. முட்புதர்களாக கிடந்த இந்த இடத்தை தனியார் சிலர் சுத்தம் செய்து வீட்டு மனைகளாக விற்க கற்களை நட்டு வைத்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆசிஷ் சாட்டர்ஜிக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில் மாதவரம் தாசில்தார் பாண்டியன் மேற்பார்வையில் புழல் வருவாய் அதிகாரி இளவரசி, கிராம நிர்வாக அதிகாரிகள் ஆதிகேசவன், எஸ்தர், சேகர் ஆகியோர் அரசு நிலத்தில் பிளாட் போடப்பட்டிருந்த கற்களை உடைத்து அகற்றினர். சுமார் ரூ. 3 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, அரசு நிலத்தை பிளாட் போட்டு விற்க முயன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.