சிந்திக்காமல் ஆடுவோம்: டோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த சீசனுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் மற்றும் வீரர்கள் பரிமாற்றத்திற்கு பின்னர் எல்லா அணிகளும் வலுவானதாக உள்ளன. இதனால் இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும். நாங்கள் முடிவு குறித்து அதிகம் சிந்திக்கவில்லை. சுமார் 60 நாட்கள் நீடிக்கும் இந்த போட்டியில் தொடக்கம் முதலே முடிவு குறித்து கவனம் செலுத்துவது கடினமான காரியமாகும். அவ்வாறு ஆட்டத்தின் முடிவு குறித்து நினைத்து கொண்டிருந்தால், அதனால் நெருக்கடி ஏற்பட்டு வீரர்களின் திறன் பாதிக்கப்படும். எனவே ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவோம்.
இரண்டு முறை தொடர்ந்து பட்டம் வென்று இருப்பதால் இந்த முறை நெருக்கடி இருக்க தான் செய்யும். இருப்பினும் நெருக்கடி அதிக அளவில் இல்லாமல் இருந்தால் அது சிறப்பாக செயல்பட தூண்டுவதாக இருக்கும். கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் அணியாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். அது எங்களது பலமாகும். அதேபோல் இந்த முறையும் அணியின் ஒவ்வொரு வீரர்களும் தங்கள் பணியையும், பொறுப்பையும் உணர்ந்து விளையாடினால் மீண்டும் பெருமையை பெற முடியும்.
உள்ளூரில் நடைபெறும் ஆட்டங்களில் பிட்ச் பிரச்சினையாக இருக்காது. தொடக்க ஆட்டக்காரர் மைக் ஹஸ்ஸி முதல் சில போட்டிகளில் ஆடமுடியாவிட்டாலும் தொடக்க வீரராக யார் என்பதில் பிரச்சினை இல்லை. அனிருதா தொடக்க வீரராக ஆடி இருக்கிறார். அஸ்வின் கூட பேட்டிங்கில் நன்றாக செயல்படுகிறார். இதனால் தொடக்க வீரராக யார் இறங்குவது என்பதில் எங்கள் அணிக்கு பிரச்சினை இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் ஹர்பஜன்சிங் போராட்ட குணம் கொண்டவர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படக்கூடிய அவர் அணியை நன்றாக வழிநடத்துவார். இப்படி சொல்வதால் தெண்டுல்கரை குறை சொல்வதாக நினைக்கக்கூடாது.
ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்தக்கூடியவர். அவர் ஏலத்தொகைக்கு (ரூ.10 கோடி) ஏற்புடையவர் தான்.
விளையாட்டில் ஏற்றம் இறக்கம் இருப்பது சகஜம் தான். கடந்த ஆண்டில் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் வெளிநாட்டில் நடந்த தொடரில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டி முடிந்ததும், ஐ.பி.எல். போட்டி நடந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பு சற்று குறைந்தது. இந்த ஆண்டு போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு நிச்சயம் அதிகமாக இருக்கும். யுவராஜ்சிங் சிகிச்சைக்கு பிறகு நன்கு குணமடைந்து வருகிறார். அவர் மீண்டும் வலுவாக ஆட்ட களத்துக்கு திரும்புவார்.
இவ்வாறு டோனி கூறினார்.