300 கிலோ எடையை தாங்கும் புதிய பசை வசதிக்கேற்ப பொருட்களை சுவரில் தொங்கவிட, ஆணி அடித்து அதில் மாட்டி வைப்பதுதான் வழக்கமாக உள்ளது. இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆணி கழன்று விட்டால், விலை உயர்ந்த பொருட்கள் கீழே விழுந்து நொறுங்கிவிடுகின்றன.
இதை தவிர்க்க ‘க்ளு’ எனப்படும் பசை உதவியுடன் கொக்கிகளை ஒட்டி அதில் மாட்டி கொள்ள பல்வேறு பசைகள் தயாரிக்கப்படுகின்றன. இதிலும் பிரச்னை ஏற்பட்டது. அதிக எடையுள்ள பொருட்களை பசையில் ஒட்டப்பட்ட கொக்கியில் மாட்டினால் விழுந்துவிடுகின்றன.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் 318 கிலோ எடையை தாங்க கூடிய புதிய க்ளு தயாரிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. சுவரில் காணப்படும் சாதாரண பல்லிகளை அடிப்படையாக கொண்டு இந்த கம் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் சாதனை இது. டங்க்கன் இர்ஸ்சிக் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் சுவரில் தலைகீழாக ஒட்டி கொள்ளும் பல்லியின் சாதுரியம் குறித்த தகவல் அலசப்பட்டது.
சுவரில் அது கால் பதித்தாலும் அதன் தடம் கண்ணுக்கு புலப்படாது. சுமார் 4 கிலோ எடையை தாங்கும் அளவுக்கு அதன் கால்களில் சுரக்கும் பசைகள் வலுவானவை. கண்ணுக்கு புலப்படாதவை. கடந்த 20 வருடங்களாக இதுகுறித்த ஆய்வு நடைபெற்றது. இதில் கேடு விளைவிக்காத பல்வேறு ரசாயன கலப்புகளை கொண்டு புதிய வலுவான கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கனமான பொருட்களை சுவரில் ஆணியின் உதவியின்றி தேவைக்கேற்ப ஒட்டலாம். விரைவில் விற்பனைக்கு வரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.