டோனிக்கு ஷேவாக் பதிலடி
சீனியர் வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக உள்ளனர் என்று கூறிய டோனிக்கு, ஷேவாக் பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்திய சீனியர் வீரர்களின் பீல்டிங் மந்தமாக உள்ளது என்றும், இவர்களின் பீல்டிங் குறைபாட்டால் 20 ரன்கள் வரை கூடுதலாக சென்று விடுகிறது என்றும், இதனால் தான் சுழற்சி முறை கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் சில நாட்களுக்கு முன்பு இந்திய ருக்படன் டோனி கூறியிருந்தார்.
இது பற்றி நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு தற்காலிக கேப்டன் ஷேவாக்கிடம் நிருபர்கள் சரமாரி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ஷேவாக் கூறியதாவது:
பீல்டிங் குறித்து டோனி என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது. 2015 ம் ஆண்டு இங்கு (ஆஸ்திரேலியா) நடக்கும் உலக கோப்பை போட்டியில் விளையாட இளம் வீரர்கள் நிச்சயம் இங்கு வருவார்கள். எனவே இங்குள்ள சூழலை அறிய அவர்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்க விரும்புகிறேன்'' என்று மட்டுமே டோனி எங்களிடம் தனித்தனியாக பேசினார்.
இன்று நான் கேட்ச் செய்ததை (ஜெயவர்த்தனேவுக்கு டைவ்' அடித்து சூப்பராக கேட்ச் செய்தார்) பார்த்தீர்களா? எனது பீல்டிங் மந்தமாகவாக இருந்தது? நான், தெண்டுல்கர், கம்பீர் உள்ளிட்டோர் கடந்த 10 ஆண்டுகளாக இதே போன்று தான் பீல்டிங் செய்து வருகிறோம். சீனியர் வீரர்கள் பீல்டிங்கில் மெதுவாக (ஸ்லோ) உள்ளனர் என்று டோனி கூறினால், அது ஏன் என்று அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் தான் (நிருபர்கள்) அவரிடம் கேட்க வேண்டும்.
சுழற்சி முறை தொடர்பாக டோனியிடம் கலந்துரையாடுவீர்களா? என்று கேட்கிறீர்கள். நான் ஏன் அவரிடம் பேச வேண்டும். அவர் அணியின் கேப்டன். அவரும், பயிற்சியாளரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்க வேண்டும் என்று விரும்பினால், அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நான் அனைத்து போட்டிகளிலும் விளையாட தயாராகவே இருக்கிறேன். இருப்பினும் ஆடும் லெவன் அணியில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் முடிவை பொறுத்தது. நாங்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினால், நாங்கள் ஓய்வு எடுக்கிறோம். அதில் எனக்கு சந்தோஷம் தான்.
அதற்காக எனக்கும், டோனிக்கும் பிளவு இருப்பதாக அர்த்தமில்லை. நாங்கள் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவர் (டோனி) அணியின் கேப்டன். அதனால் தாம் விரும்பியதை அவரால் கூற முடியும்.
இந்த ஆட்டத்தில் கடைசி 10 ஓவர்களில் எங்களது பந்து வீச்சு சரியில்லை. பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. தெண்டுல்கர், கம்பீர் விளையாடிய விதத்தை பார்த்த போது நல்ல தொடக்கம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் தொடக்கத்திலே 3 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். ரெய்னாவும், கோக்லியும் 45 ஓவர்கள் வரை நின்றிருந்தால், ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம். ஆனால் யாரும் கடைசி வரை பேட் செய்ய வில்லை.
அடுத்த இரு ஆட்டங்களில் நாங்கள் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். ஷார்ட்டுகளை அடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 5 முறை தேர்டு மேன் மற்றும் ஸ்லிப்பில் நான் ஆட்டம் இழந்திருக்கிறேன். ஆட்டங்களில் வெற்றி பெற எனது பேட்டிங் திறனில் முன்னேற்றம் ஏற்பட வேண்டியது முக்கியமாகும். அதிரடியாக ஆடுவதற்கு முன்பாக, சில பந்துகளை அடிக்காமல் விடுவது நல்லது என்று நினைக்கிறேன். இவ்வாறு ஷேவாக் கூறினார்.