சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்
இடைத்தேர்தல் நடைபெறும் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு, நாளை (22.02.2012) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து அந்தத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு அமைச்சராக இருந்த கருப்பசாமி மறைந்ததையடுத்து, அந்த தொகுதியில் மார்ச் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன.
நாளை (22.02.2012) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை 29ஆம் தேதி வரை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீது வரும் 1ஆம் தேதி பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற மார்ச் 3ஆம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 18ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறித்துள்ளது.