சட்டமன்ற தேர்தலின் தோல்வி தி.மு.க.வின் தோல்வியல்ல!
பேராசிரியர் அன்பழகன் பேச்சு!

சட்டமன்ற தேர்தலின் தோல்வி தி.மு.க.வின் தோல்வியல்ல. தோற்றது அண்ணாவின் கொள்கை, பெரியாரின் கொள்கை, தமிழரின் தன்மானம், திராவிடப்பற்று இதுதான் தோற்றது.
தமிழ்நாட்டை, தமிழ் இனத்தை காப்பாற்ற திராவிட இயக்கம் மேலும் வளரவேண்டும் என்று பேராசிரியர் அன்பழகன் கூறினார்.
கும்பகோணம் நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் நிதியமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது: சட்டமன்ற தேர்தலின் தோல்வி தி.மு.க.வின் தோல்வியல்ல. தோற்றது அண்ணாவின் கொள்கை, பெரியாரின் கொள்கை, தமிழரின் தன்மானம், திராவிடப்பற்று இதுதான் தோற்றது. தி.மு.க. அரசியல் இயக்கம் அல்ல. தமிழர்களின் மானம் காக்க உருவாக்கப்பட்ட இயக்கம். சட்டசபைக்கு போகிற வழி தி.மு.க.விற்கு அடைக்கப் பட்டிருக்கலாம்.ஆனால் மக்கள் மன்றத்திற்கு போகிற வழியை எந்த சக்தியாலும் அடைக்கமுடியாது.
அண்ணா படத்தை கொடியில் போட்டுக்கொண்டு வைதீகம் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. திராவிடம் என்று பெயர் சொல்கிறது. அண்ணா, பெரியார் கொள்கை என்பது அ.தி.மு.க.வில் இல்லை.
தமிழுக்கு உயர்வு தரக்கூடிய காரியங்களை அந்த அம்மையாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையில் செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை கலைஞர் அமைத்தார். அதை அந்த அம்மையார் தூக்கி எறிந்து விட்டார். தமிழ் நாட்டில் உள்ள தமிழக அரசு, தமிழுக்கு செய்கின்ற தொண்டு இது தானா? தமிழக முதலமைச்சராக இருந்து கொண்டு இவர் தமிழுக்கு துரோகம் செய்கிறார்.
பெரியார், அண்ணா தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டனர். நீதிக்கட்சி மூலம் இட ஒதுக்கீடு உரிமை கிடைத்தது. தமிழர்கள் முன்னேற திராவிட இயக்கம்தான் காரணமாக இருந்தது. முன்பு பள்ளிகளில் உயர் ஜாதியை சேராதவர்கள் ஆசிரியர்களாக, மாணவர்களாக இல்லாமல், குறைந்த அளவில் இருந்தனர். ஆனால் அந்த நிலை இன்று இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழின் பெருமையை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தை அண்ணா அன்றைக்கு நடத்திக்காட்டி எழுச்சியை தமிழகத்தில் ஏற்படுத்திக்காட்டினார். அந்த நாடகத்தை இன்றைக்கும் தி.மு.க.வினர் ஆங்காங்கே நடத்தவேண்டும். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் புத்தகத்தை தமிழர்கள் படிக்க செய்யவேண்டும்.
சட்டசபையில் நான் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த அம்மையார் எனக்கு வயதாகிவிட்டது என்றார். உலகத்தில் உண்டியல் குலுக்குகிறகட்சி கம்யூனிஸ்டுகட்சி என்று பேசினார். பா.ம.க.வை மரம் வெட்டும் கட்சி என்றார். எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தை, சங் கரன்கோவில் இடைத் தேர்தலில் சந்திக்க தயாரா என்று கேட்கிறார்.
கருணாநிதி ஆட்சி ஒழிந்தால் மின்வெட்டு தீர்ந்து விடும் என்று சொன்னார்கள். இன்றைக்கு 9 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. 2012 மே மாதத்தில் மின்வெட்டு சரி செய்யப்படும் என்று சொன்னவர்கள், தற்போது 2013 ஜுலையில் சரி செய்யப்படும் என்கிறார்கள்.
5 ஆண்டுகள் ஆட்சி செய்து மாதம் ரூ.1 சம்பளம் வாங்கியவர் ரூ.66 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கு நடைபெறுகிறது. வருமான வரி வழக்கு ஓராண்டில் முடிந்து விடும். ஆனால் இந்த வழக்கு 15 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அவர்கள் ராஜ்யம். என்ன வேண்டுமானாலும் நடக்கும். வழக்கறிஞர்களும் தூது போகிறார்கள்.
20 ஆண்டுகள் அவருக்கு தோழியாக இருந்தவரை வெளியே அனுப்பியிருக்கிறார். பெங்களூர் நீதிமன்றத்தில் எல்லாவற்றிற்கும் நான்தான் பொறுப்பு ஜெயலலிதா பொறுப்பு இல்லை என அந்ததோழி கூறியிருக்கிறார். அவங்க விலக்கி வைக்கிறாங்க. தோழி நெருங்கி போக பார்க்கிறாங்க. யார் என்ன செய்கிறார்கள் என்பதை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை தமிழ் இனத்தை காப்பாற்ற திராவிட இயக்கம் மேலும் வளர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.