உ.வே.சா. வீட்டை நாட்டுடமையாக்க கோரிக்கை
காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பழந்தமிழ் இலக்கிய நூல்கள் பல உயிர் பெற்றதற்குக் காரணமானவர் உ.வே.சாமிநாத அய்யர். சிறந்த பக்திமானாகத் திகழ்ந்த அய்யர் கரிவலம் வந்த நல்லூரில் கோயில் பூஜை செய்பவரிடம் ஏடுகள் இருப்பதாக அறிந்து அவரை அணுகியபோது பதினெட்டாம் பெருக்கின்போது அவற்றை ஆற்றில் விட்டுவிட்டோம் என்று கூறியதைகேட்டு, அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.
ஒரு முறை உ.வே.சா. விழாவைக் கொண்டாடியபோது ஜி.கே.மூப்பனாரும் நானும் தமிழ் ஆர்வலர்களும் அவர் பிறந்த உத்தமதானபுரத்தில் இருந்து அவருடைய உருவப்படத்தை சப்பரத்தில் வைத்துத் தோள் கொடுத்து, கும்பகோணம் மூர்த்தி கலையரங்கிற்கு கொண்டு வந்து விழா நடத்தினோம்.
உ.வே.சா. அவர்களின் வீட்டைத் தமிழக அரசு பாரம்பரிய வரலாற்றுச் சின்னமாக்க உடனே முன் வரவேண்டும். அதேபோல் மயிலாப்பூர் பிச்சைப்பிள்ளைத் தெருவில் எட்டாம் எண் வீட்டில் குடியிருந்த சுப்பிரமணிய சிவாவின் வீட்டையும், பாரதியார் வீட்டை நினைவுச் சின்னமாக்கியது போல் அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.