ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியினர் முழு அடைப்பு போராட்டம்
ஒடிசாவில் கடந்த செவ்வாய் கிழமை அன்று நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸ் கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் 20 காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்துள்ளதாக அம்மாநில துணை காவல் ஆணையர் நிதின்ஜித் சிங் தெரிவித்துள்ளார். முழு அடைப்பு போராட்டத்தினால் மாநிலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் மற்றும் பல்வேறு ரெயில் நிலையங்களில் காங்கிரசார் தண்டவாளத்தின் மீது நின்று ரெயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் 38 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.