இரவு முழுவதும் ஓடிக்கொண்டிருந்த டிவி வெடித்தது
ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ஒருவரின் வீட்டில் இரவு முழுவதும் இயங்கிய தொலைக்காட்சி பெட்டி திடீரென வெடித்து, தீவிபத்து ஏற்பட்டது.
ஓட்டேரி, ஜமாலியா நகரை சேர்ந்தவர் டாக்டர் சுந்தர் ராஜன்,68. இவர், எழும்பூர் போலீஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தனியறையில் சுந்தர்ராஜன் படுத்து உறங்குவது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு தொலைக்காட்சி பெட்டியில் நிகழ்ச்சிகளை பார்த்தபடி, சுந்தர்ராஜன் அப்படியே தூங்கிவிட்டார்.
இரவு முழுக்க தொலைக்காட்சி பெட்டி இயங்கிக் கொண்டிருந்தது. விடியற்காலையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தூங்கிக் கொண்டிருந்த சுந்தர்ராஜனை, அவரது குடும்பத்தினர் காயமின்றி காப்பாற்றினர்.
இத்தீவிபத்தில் மரக் கட்டில், மர "ஷோபா', படுக்கை உள்ளிட்ட பொருட்கள் மளமளவென எரியத் துவங்கின.தகவலறிந்த வியாசர்பாடி எஸ்.எம்.நகர் தீயணைப்பு வண்டி, விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.