வெண்மைப்புரட்சியின் தந்தை குரியன் மரணம் :ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
வெண்மைப்புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியன் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வெண்மைப்புரட்சியின் தந்தை என்ற பெயரைப்பெற்றவர் வர்க்கீஸ் குரியன். உடல் நலக்குறைவால் குஜராத் மாநிலம், ஆனந்த் அருகேயுள்ள நாடியாத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 1921-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பிறந்தவர் குரியன். சென்னை லயோலா கல்லூரியில் படித்து பி.எஸ்சி., பட்டம் பெற்றார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் முதுநிலை பட்டமும் பெற்றார்.
இந்தியாவுக்கு திரும்பி வந்த இவர் குஜராத், ஆனந்த் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பால் பவுடர் ஆலையில் 1949-ம் ஆண்டு மே மாதம் சேர்ந்து பணியாற்றினார்.
பின்னர் அரசுப்பணியை துறந்து விட்டு கூட்டுறவு பால் இயக்கத்தில் சேர்ந்தார். அப்படித்தான் அமுல் உருவானது.
இந்தியாவை பால் உற்பத்தியில் தன்னிறைவு காண வைத்ததுடன், உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக மாற வழிவகுத்தார்.
இந்தியாவின் பால்காரர் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். மறைந்த குரியனுக்கு மவுலி என்ற மனைவியும், நிர்மலா என்ற மகளும் உள்ளனர்.
குரியனின் மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "வெண்மைப்புரட்சிக்கு வித்திட்டவர் குரியன். அவர் வேளாண்மை, கிராமப்புற முன்னேற்றம், பால் உற்பத்தி துறைகளில் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளார்'' என புகழாரம் சூட்டி உள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் தனது இரங்கல் செய்தியில், "குரியன் மிகச்சிறப்பான மனிதர். விவசாயப்பொருள் உற்பத்தி, நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு குரியனின் பங்களிப்பு அளவிடமுடியாதது. இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின், பால் தொழிலின் சின்னமாக திகழ்ந்தவர் குரியன்'' என குறிப்பிட்டுள்ளார்.
குரியனின் இறுதிச்சடங்கு ஆனந்த் நகரில் நேற்று மாலை நடந்தது.