"இதையெல்லாம் பார்ப்பதற்கா இறைவன் என் கண்களைப் படைத்திருக்கிறான்' என அவர் வேதனையுடன் சொல்லிக்கொண்டே, தன் கையிலிருந்த புகைப்படங்களை நம்மிடம் காட்டினார். காய்ந்த நிலம், சாய்ந்த பனை, சிதைந்த வீடுகள், மனித நடமாட்ட மில்லாத தெருக்கள் என அவற்றைப் பார்த்தபோதே தெரிந்துவிட்டது, அது ஈழம்தான் என்பது.
போர்நிறுத்தம் நிலவிய ரனில் விக்ரமசிங்கே ஆட்சியிலும், மனிதத்தன்மையே இல்லாத ராஜ பக்சேவின் கொடூர யுத்தம் உச்சகட்டத்தை அடைந்த நேரத்திலும் தமிழீழப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை செய்த ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அவர், தன் புகைப்படத்தை தவிர்க்கச் சொல்லிவிட்டு, தான் எடுத்த புகைப்படங்களை மட்டும் வெளியிடும்படி கேட்டுக்கொண்டார். "இப்போதைக்கு என் பெயர் சங்கமன்' என்றவரிடம், "இந்தப் படங்கள் எப்போது எடுக்கப்பட்டவை?' என்றோம்.
""சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டதுதான். எடுத்ததும் நான்தான். தொண்டு நிறுவனத்தின் சார்பில் சில வாரங்களுக்கு முன் மீண்டும் ஈழப்பகுதிகளுக்குச் சென்றேன். யாழ்ப்பாணம், முழங்காவில், ஆண்டாங்குளம், விஸ்வமடு, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, மன்னார், முருங்கன், முல்லைத்தீவு, நந்திக்கடல் இப்படிப் பலப் பகுதிகளுக்கும் போய் வந்தேன். எல்லா இடங்களும் வெறிச்சோடித்தான் இருக்கின்றன. சிதைந்த வீடுகளில் வாழ்கிற மக்களும் பயத்துடனேயேதான் இருக்கிறார்கள். அவர்களை எந்நேரமும் இலங்கை ராணுவம் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.

சாந்தமதி என்ற பெண் என்னிடம், "வீட்டில் நாங்க சந்தோசமா இருக்கறம். ஆனா, வெளியில வரும்போது ஆமிக்காரகள பாத்தாலே பயம் வந்து, பைத்தியம் பிடிச்சதுபோல ஆயிடறோம்' என்று சொன்னார். பெட்டாலியன் 564 ஹெட்குவார்ட் டர்ஸ், பெட்டாலியன் 565 ஹெட்குவார்ட்டர்ஸ் என்று ராணுவ கேம்ப்புகளை அமைத்து, அந்தந்த பெட்டாலியன்களும் ராணுவ அணிவகுப்பை நடத்தி மக்களை அச்சமூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
Commando for Civil Affairs என்றொரு ராணுவ அதிகாரி யை ஒவ்வொரு பகுதியிலும் ராஜ பக்சே அரசு நியமித்திருக்கிறது. இவர்களின் வேலையே, தமிழ் மக் கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து ரிப்போர்ட் செய்வதுதான். ஒரு வீட்டில், பெண் சடங்காகிவிட் டாலும் இந்த அதிகாரியிடம் தகவல் கொடுத்துவிட்டுத்தான் சடங்கு நிகழ்ச்சி நடத்தவேண்டும். அப் போதுதான், உறவினர்கள் அந்த வீட்டில் கூட முடியும். தகவல் சொல் லாமல் கூடிவிட்டால், ராணுவத்தினர் வந்து அவர்களைப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். தமிழர் பகுதிகளில் முழுமையான ராணுவ ஆட்சி நடக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்'' என்றார் வேதனையோடு.
"தமிழர்களின் மறுவாழ்வுக் கானத் திட்டங்களை வேகமாக நிறைவேற்றியிருப்பதாக ராஜபக்சே அரசு அறிவித்தபடியே இருக்கிறதே' என்று கேட்டதற்கு, ""உலகத்தை நம்ப வைக்கவேண்டும் அல்லவா, அதற் காகத்தான்'' என்றார் சங்கமன். அவரே மேலும், ""தமிழர் பகுதி களுக்கு பஸ் வசதி செய்யப்பட்டி ருக்கிறது. புதிதாக சாலைகள் போ டப்பட்டிருக்கின்றன. கடைகள் திறந்திருக்கின்றன. அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, யுத்தகாலத்தைவிட இப்போது குறைந்திருக்கிறது. ஆனால், தமிழ் மக்களிடம் நிம்மதி இல்லை. இரண்டு தமிழர்கள் பஸ்ஸிலோ கடைவாசலிலோ சிரித்துப் பேசினாலே ராணுவத்தின ரின் கண்காணிப்பு க்குள்ளாகிறார்கள்.
செட்டிக்குளத்தில் உள்ள முள்வேலி முகாமில் தமிழர்கள் இன்னும் சிக்கியிருக்கிறார்கள்.. ஜெயில்களிலும் தமிழ் இளைஞர் களும் இளம்பெண்களும் சித்ரவதை களுக்குள்ளாகி வருகிறார்கள். தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற் றத்தைக் காணமுடிகிறது. போரில் கொல்லப்பட்ட மக்களின் எலும்புகள் தமிழீழப் பகுதிகளில் கிடக் கின்றன. அவற்றை ஆசிட் ஊற்றி அழித்து, தடயம் இல்லாதபடி செய்யும் வேலைகள் நடப்பதாகச் சொன்னார்கள். இந்த வேலைகளை முடித்த பிறகு, சிங்களர்களைக் குடியேற்றும் வேலைகள் முழுமையாகவும் தீவிரமாகவும் நடைபெறுமாம்.

4 லட்சம் சிங்களர்களுக்கு வீடும் அதனையொட்டி விளைநிலமும் அமைந்த காணிகள் வழங்கப்படும் என ராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. தமிழர் பகுதிகளுக்கு சிங்களர்கள் பஸ் ஏறிவந்தால் அவர்களுக்கு டிக்கெட் கிடையாது. இலவசப் பயணம்தான். அத்துடன், 1000 ரூபாய் ஊக்கத் தொகையும் கொடுக்கப்படுகிறது. அவர்கள் ஆர்வத்துடன் வந்து இங்கே குடியேறவேண்டும் என்றுதான் இந்த ஏற்பாடு. அதற்காகவே தமிழர் பகுதிகளில் சிங்களப் பள்ளிகள் கட்டப்படுவதுடன் அவர்கள் விரும்பி வாங்கும் பொருட்களுக்காக சூப்பர் மார்க்கெட்டுகளையும் இலங்கை அரசு அமைத்து வருகிறது. கிளிநொச்சியில் ஒரு சர்ச்சுக்குள்ளேயே புத்தர் சிலையைக் கொண்டு வந்து வைத்துவிட்டார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்'' என்று அவர் சொல்லும்போதே குரல் கம்மியது.
"விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்கும் தற்போதைய நிலைமைகளுக்கும் உள்ள வேறுபாட்டை தமிழீழ மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்' என்றோம் அவரிடம். ""புலிகளின் நிர்வாகத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் இருந்தது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம், படையில் உள்ள தங்கள் பிள்ளைகளின் உயிர் பறி போகலாம் என்ற அச்சம் அப்போது மக்களிடம் இருந்ததென்றாலும், இப்போதைய நிலைக்கு புலிகள் நிர்வாகமே மேலானது என்றே மக்கள் நினைக்கிறார்கள். புலிகள் இருந்தவரை சிங்களக் குடியேற்றத்துக்கு இடமேயில்லை. அதுபோல, மது விடுதி களும் ஆபாச கேளிக்கைகளும் பொது இடங்களில் செயல்பட வில்லை. இப்போது பல இடங்களிலும் பீர், பிராந்தி, விஸ்கி என மதுபானங்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, யாழில் பாலுணர்வைத் தூண்டும் படங்கள் திரையிடப்படுகின்றன. ஆண்-பெண் உறவுகளில் பெரிய மாறுதலைக் காணமுடிகிறது. இளைஞர்களைத் திசை திருப்பும் நடவடிக்கைகள் மூலம் விடுதலை உணர்ச்சிகள் தலையெடுத்துவிடாதபடி பார்த்துக்கொள்கிறது சிங்கள அரசு. தமிழீழ மக்கள் இதனைச் சுத்தமாக விரும்பவில்லை. அவர்கள் தங்களின் கலாச்சாரமும் பண்பாடும் காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கின்றனர்.
தங்களுக்காகப் போராட இப்போது யாருமில்லை என்ற ஏக்கமும் விரக்தியும் தமிழீழ மக்களிடம் இருக்கிறது. ராஜபக்சே அரசோ விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறது. ஆனால், தமிழீழ மக்களிடம் நான் பேசியபோது, "அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. தம்பியண்ணன் (பிரபாகரன்) நிச்சயம் வருவார்' என்றார்கள். அவர்களின் இந்த நம்பிக்கை ஒன்றுதான், இன்றைய நிலையில் சிங்களர்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பயன்படும் ஒரே ஆயுதம். விடுதலைப் புலிகள் அமைப்பு எந்த நேரமும் உயிர்பெற்று வலிமையடையும் என்ற பயம் சிங்களர்களுக்கும் இருப்பதால், தமிழர் பகுதிகளில் குடியேற அவர்கள் தயங்குகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு நிறைய சலுகைகளை அள்ளிக்கொடுத்து குடியேற வைக்கிறது சிங்கள அரசு'' என்றார் சங்கமன் விரிவாக.
புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் பழைய முகாம் ஒன்றை சிங்கள ராணுவம் தன்னுடைய கட்டுப்பாட்டில் போர் நினைவகமாக மாற்றியிருப்பதற்கானப் புகைப்படங்களை நம்மிடம் காட்டிய அவர், ""இந்த நீச்சல்குளம்தான் கடல்புலிகளுக்குப் பயிற்சி அளிக்கும் இடமாக இருந்திருக்கிறது. கடலின் ஆழ மாறுபாடுகளுக் கேற்ப இந்தக் குளத்திலும் படிப்படியாக ஆழம் அதிகரிக்கப்பட்டிருக் கிறது'' என்பதை சுட்டிக்காட்டினார். ""போரில் வீரமரணம் அடையும் மாவீரர்களின் உடல்கள் இங்கே கொண்டுவரப்பட்டு, தலைவர் பிரபாகரன் நேரில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார். அதற்காக மூன்று பாதாளத்தளங்களைக்கொண்ட ஒரு கட்டடமும் இங்கு உள்ளது. இந்த இடங்களில் இப்போது சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே போர்டுகளை வைத்து, தமிழை முற்றிலுமாக அகற்றியிருக்கிறது இலங்கை அரசு'' என்றவர், மேலும் சில தகவல்களையும் சொன்னார்.

""மாவீரர்களின் நடுகல் இருந்த இடங்களையெல்லாம் புல்டோசர் களால் தரைமட்டமாக்கி விட்டார்கள். இப்போது அங்கே புல் முளைத்திருக் கிறது. யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இருந்த மாவீரர் துயிலும் இடத்தை அழித்து, அங்கு புதிய கட்டிடமே கட்டிவிட்டது சிங்கள அரசு. தமிழர் பகுதிகளின் விளைநிலங்களெல்லாம் கட்டாந்தரைகளாக இருக்கின்றன. சிறப்பான ஏரிப்பாசனத்தைக் கொண்ட நிலங்கள் அவை. ஆனால், இப்போது விவசாயம் செய்யும் நிலையில் மக்கள் இல்லை. எப்போதும் பயத்திலேயே இருப்பவர்கள் எப்படி வெளியே வரமுடியும்?'' என்றவரிடம், "தமிழ்ப் பகுதிகளின் எம்.பிக்கள் இதுகுறித்தெல்லாம் பேசமுடியாதா ?' என்றோம்.
""சிங்கள அரசின் கடும் நடவடிக்கைகள் எல்லோரையுமே அச்சப்பட வைத்திருக்கிறது. தமிழ் எம்.பிக்களால் இப்போதுள்ள நிலையில் பெரிதாக எதுவும் செய்துவிடமுடியாது. நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஓரளவு குரல் கொடுக்கலாம். அதையும்கூட வேகமாக சொல்ல முடியாது'' என்று எதார்த்த நிலைமையை விளக்கினார். "சிங்கள பத்திரிகையாளர்களும் அங்குள்ள அமைப்பினரும் தமிழர்களின் நிலை பற்றி உணர்ந்திருக்கிறார் களா?' எனக் கேட்டதற்கு, ஒரு சிலர் உணர்ந்திருந்தாலும், பெரும்பாலான சிங்களர்களின் மனதில் ராஜபக்சே ஒரு ஹீரோவாக இருக்கிறார். அந்த இமேஜை காப்பாற்றிக்கொள்ளும் அளவிலேயே ராஜபக்சேவின் செயல்பாடு களும் இருக்கின்றன. உலக நாடுகளின் கவனத்திற்குத் தமிழர் பிரச்சினை யைக் கொண்டு சென்று, அதன் மூலமாக ராஜபக்சேக்கு நெருக்கடிக் கொடுத்தால் மட்டுமே ஏதாவது முன்னேற்றம் ஏற்படும்'' என்றார் தெளிவாக.
"இந்தியா அளித்த நிவாரண உதவிகளின் நிலை என்ன?' என்றோம். "கிளிநொச்சியில், இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படும் வீடுகள் என்ற போர்டை பார்த்தேன். அவ்வளவுதான். இந்தியாவைவிட 4 மடங்கு நிதியுதவி செய்துள்ள சீனாவைத்தான் இலங்கை அரசு நம்புகிறது'' என்றவர், தமிழக மக்களின் தார்மீக ஆதரவு ஈழத்தமிழர்களுக்கு எப்போதுமே மனதளவில் நம்பிக்கையைக் கொடுக்கும். அது இலங்கை அரசுக்கு எரிச்சலைக் கொடுக் கும். இப்போதுகூட தமிழகத்திலிருந்து ஒலிக்கும் குரல்களை இந்திய அரசு அடக்கவில்லை என்று ராஜபக்சே கடுப்பாக இருக்கிறார். இலங்கையை சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் ராஜபக்சே ஆதரவு நிலையிலேயே இருப்பதால், உலக நாடுகள்தான் தமிழர்களின் உரிமைகளுக்குத் துணை நிற்கவேண்டும்'' என்றார் அழுத்தமாக.
ஈழத்தமிழர்களுக்குத் தேவைப்படும் உடனடித் தீர்வு, மன நிம்மதியுடனான வாழ்வுரிமை. நிரந்தரத் தீர்வு, சுதந்திரத் தனிநாடு. இதைத்தான் சங்கமனின் சமீபத்திய பயணமும் அதில் எடுத்த புகைப் படங்களும் காட்டுகின்றன.
-லெனின்