செய்தி கேட்டு திடுக்கிட்டேன்: காதர் பாட்சா என்கிற வெள்ளைச்சாமி மறைவுக்கு கலைஞர் இரங்கல்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தென்பாண்டி சீமையில் கழகத்தை வளர்த்த மூத்த முன்னோடிகளில் ஒருவரும், மிசாவில் ஓராண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்தவரும், முது குளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக 1971 முதல் 1976 வரையிலும், பின்னர் 1989 முதல் 1991 வரையிலுமாக இரண்டு முறை மிகச் சிறப்பாக பணியாற்றியவர். கடலாடி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளராக இருந்தவரும், கழகத்தின் சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினராக இருந்தவரும், கமுதி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக 3 முறை பணியாற்றியவருமான காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி படு கொலைக்காளாகி மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டுத் திடுக்கிட்டேன்.
முதுகுளத்தூர் பகுதியில் முதியோர், இளையோர் என்று பாராமல் அனைவரிடமும் அன்பு காட்டி, அமைதி வழியில் அயராமல் மக்கள் பணியாற்றியவர் காதர் பாட்சா என்கிற வெள்ளைச்சாமி. சென்னைக்கு வரும் போதெல்லாம் என்னைச் சந்திக்காமல் செல்லவே மாட்டார்.
நீண்ட நெடிய திடகாத்திரமான உருவம் அவருடையது. எல்லோரிடமும் மிகவும் பொறுமையாகப் பேசுவார். என்ன பகை காரணமாக அவரை கொன்றார்களோ தெரியவில்லை. கழகம் இடுகின்ற கட்டளைகளை ஏற்று கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அத்தனை அறப்போராட்டங்களிலும் கலந்து கொள்வார். மதுரை, முகவை மாவட்டங் களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதெல்லாம் என்னுடன் அந்தச் சுற்றுப் பயணங்களில் அவரும் கலந்து கொள்வார். அவரை இழந்து வாடும் அந்தப் பகுதி கழகத்தினருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய மறைவினை மனதிலே கொண்டு எந்தவிதமான ஆத்திரத்திற்கும், கோபத்திற்கும் கழகத் தோழர்கள் ஆளாகாமல், அமைதி காக்க வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.