பட்டாசுகள் இருந்ததே காரணம்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து பற்றி அறிக்கை தாக்கல்
ஆந்திர மாநிலம் நெல்லூரில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலியானார்கள். இந்த ரெயிலில் தீ வேகமாக பரவுவதற்கு பட்டாசுகள் இருந்ததே காரணம் என்று தடய அறிவியல் நிபுணர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 30-ந் தேதி புதுடெல்லியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தீ பிடித்தது. இதில் அந்த ரெயிலின் எஸ்-11 பெட்டி முழுவதும் எரிந்து போனது. இந்த விபத்தில் 32 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து ஆந்திர மாநில தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வந்தனர். இந்த ஆய்வின் அறிக்கையை நேற்று அவர்கள் தாக்கல் செய்தனர்.
இந்த குழுவில் இருந்த மூத்த அறிவியல் நிபுணர் எரிந்த ரெயில் பெட்டியில் இருந்த மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து பரிசோதனை செய்தார்.
அவர் இதுபற்றி கூறும்போது, ஷஷஅந்த ரெயில் பெட்டியில் குறைந்த பட்சம் 6 சீட்டுகளுக்கு அடியில் பட்டாசுகள் அல்லது பட்டாசு மருந்துகள் இருந்திருக்க வேண்டும். அந்த பட்டாசுகள் எரிந்த பட்டாசு மருந்துகள் இருந்தது இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த ரெயில் பெட்டியில் தீ வேகமாக பரவுவதற்கு இந்த பட்டாசுகள் தான் காரணமாக இருந்திருக்கின்றன. ஆனாலும் தீ எப்படி பிடித்தது என்பது இன்னும் தெரியவில்லை'' என்றார்.
இந்த அறிக்கை ஆந்திர ரெயில்வே போலீசாரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.