விபத்தில் உயிரிழந்த நண்பரை பார்க்க வந்தவர் விபத்துக்குள்ளாகி மரணம்
பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது எதிரே வந்த வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த நண்பரை பார்க்க வந்தபோது ஏற்பட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
பரமக்குடி ஒன்றியம் மேலப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் வேடப்பன் மகன் முத்துச்செல்வம் (30). இவர் 100 நாள் வேலைத்திட்ட களப்பணியாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 3 மாத ஆண்குழந்தை உள்ளது. இவர் பரமக்குடிக்கு வந்துவிட்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தெளிச்சாத்தநல்லூர் அருகே சென்றபோது மதுரையிலிருந்து வந்துகொண்டிருந்த வேன் ஒன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் அறிந்த அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர்கள் கருப்பையா மகன் மாரி (28), ராமு மகன் மாரிமுத்து (34), குமரையா மகன் வைரவன் ஆகியோ 3 பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை பார்த்துவிட்டு, பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, மணிநகர் பகுதியில் எதிரே வந்த மாருதி கார்மீது நிலைதடுமாறி மோதியுள்ளனர். இவ்விபத்தில் கருப்பையா மகன் மாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த மாரிக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவரும் பலத்த காயமுற்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றுள்ளனர். இந்த இருவேறுவிபத்துக்குள் குறித்து பரமக்குடி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்.